“சமூகத்திற்கு எதையாவது திருப்பித்தர வேண்டும் என்று நினைக்கும் பொழுது 23 ஆண்டுகளுக்கு முன்னர், நானும் ரவி ஸ்ரீதரனும் இணைந்து சில தன்னார்வலர்களிடம் Toronto downtown பகுதிக்கு சேவையாற்றுவதற்காக ஆரம்பித்ததுதான் FYFB எனப்படும் Fort York உணவு வங்கி (Fort York Food Bank)” என்கிறார் தேவி அரசநாயகம்.
இலாப நோக்கற்ற அமைப்பாக இயங்கும் இந்த உணவு வங்கி 1998ஆம் ஆண்டு ஆரம்பமானது Downtown Torontoவில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நேரடியாக உதவும் ஒரு தொண்டு நிறுவனம் இது.
தனது பகுதி மக்களை சமூகத்தில் உள்ளவர்களுடன் மீண்டும் இணைப்பதை பிரதான செயற்பாடாக கொண்டுள்ளது இந்த சேவை நிறுவனம்.
தமது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான முறையில் உதவுவதற்கும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்கும் ஒருங்கிணைந்த சேவைகளை இவர்கள் வழங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் (சராசரியாக), FYFB சுமார் 1,100 வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.
இதற்கு 1,500 மணிநேர தன்னார்வ சேவை செலவிடப்படுகின்றது. 3,500க்கும் மேற்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த உணவு வங்கி,ஒருவரின் பசியை போக்குவதற்கு மட்டுமல்லாது அனைவரின் வாழக்கையை முழுமை படுத்தவும் முயல்கிறது என்பதை தேவி அரசநாயகத்திடம் பேசிய பின்னர் உணர்ந்தேன்.
ஒருவர் தனது தன்மானத்தை கைவிட்டு உணவு வங்கிக்கு செல்ல குறைந்தபட்சம் மூன்று நாள் தேவைபடுகிறதாம்.
இவ்வாறு உதவி நாடுபவர்களுக்கு உணவை மட்டும் வழங்காமல், தன்னார்வத் தொண்டுமூலம் அவர்களின் இந்த நிலைக்கான காரணத்தை அறிந்து, அவர்களின் வேலையின்மையை போக்கி, நிரந்தர வேலைக்கு உதவுவது என பல உதவிகளை செய்கிறது FYFB என்ற இந்த உணவு வங்கி.
இந்த உணவு வங்கியின் சேவைகளை பெரும் தொற்று எவ்வாறெல்லாம் தடைச் செய்தது என கேட்டபோது, COVID தொற்று தமது வாடிக்கையாளரின் எண்ணிக்கையை அதிகரித்தது என்கிறார் தேவி அரசநாயகம்.
“சாரசரியாக எங்களுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 4000 வருகைகள் பதிவாகும். முதியவர்கள் (அவர்கள் எங்கள் வாடிக்கையாளர் தளத்தில் சுமார் 30 சதவீதமானவர்கள்), குழந்தைகள் உள்ள குடும்பங்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் எமது வாடிக்கையாளர்களாக உள்ளனர்” என்கிறார் தேவி அரசநாயகம். தமது வாடிக்கையாளர்களை இனரீதியானவர்கள், புதியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அவர் வகைப்படுத்துகின்றார்.
Toronto நகரத்தின் பொது சுகாதார மையத்தின் (City of Toronto’s Public Health) உதவியால் தொற்று காலத்திலும் பாதுகாப்பாக இயங்குவதற்கான அனைத்து நெறிமுறைகளையும் FYFB பின்பற்றுகின்றது. தினசரி சுத்தம் செய்தல், PPE அணிவது, சமூக இடைவேளை உறுதி செய்தல் என்று அனைத்து சுகாதார வழிமுறைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர்.
COVID காரணமாக செயல்படும் முறையை மாற்ற வேண்டிய நிலைக்கு FYFB தள்ளப்பட்டது. முன்னர் வாடிக்கையாளர்கள் கட்டடத்திற்குள் நுழையவும், சூடான உணவை உண்ணவும், சமூக மயமாக்கவும், அவர்களின் உணவுப் பொருட்களை எடுக்கவும் முடிந்தது. ஒருவர் தான் உண்ண விரும்பும் உணவை தானே தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.
ஆனாலும் COVID இவை அனைத்திலும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது பொது சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வாடிக்கையாளர்களை கட்டடத்திற்குள் அனுமதிக்க முடியாது. எனவே வாடிக்கையாளர்கள் தெருவில் வரிசையில் நிற்க – அவர்களுக்கான உணவுப் பொதிகளை FYFB தொண்டர்கள் வழங்குகின்றனர்.
இவை அனைத்தும், Daily Bread Food Bank, Second Harvest ஆகியோரின் உதவியால் சாத்தியமாகிறது. தமது வாடிக்கையாளர்கள் புதிய, ஆரோக்கியமான உணவுகளை விரும்புகிறார்கள் என்கிறார் தேவி அரசநாயகம்.
தங்கள் மாறுபட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்றார் அவர். COVID காலத்தில் Toronto Bike Brigade, Friends of Chinatown (FOCT) ஆகியோரின் பங்களிப்பையும் தேவி அரசநாயகம் சுட்டிக்காட்டுகின்றார்.
வரிசையில் நிற்க முடியாத முதியோர்களுக்கு, மிதிவண்டி மூலம் உணவு விநியோகம் செய்வதற்கு Toronto Bike Brigade இவர்களிற்கு உதவுகின்றது. FYFBக்கு செல்லும் ஆசிய மக்கள்களுக்கு அவர்களது ஆரோக்கிய சோதனை செய்து, உணவு வழங்கி இளைஞர்களுடன் இணைய (FOCT) உதவுகிறது என்றார் அவர்.
நீங்கள் ஆரோக்கியமான உணவுப்பட்டியலை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஊட்டச்சத்து மற்றும் dietitian கற்கும் முதுகலை பட்டதாரி மாணவர்களின் தன்னார்வ உதவிகள் குறித்து கூறினார் தேவி அரசநாயகம்.
“அவர்கள் வாடிக்கையாளர்கள் என்ன உண்ணவேண்டும், எவ்வளவு ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உட்பட சிற்றுண்டிகள் உட்பட மக்களுக்கு வழிகாட்டவும் உதவுகிறார்கள்” என்றார்.
FYFB சைவம், Halal, Vegan உணவு வகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. இதன் மூலம் “நாங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்” என்கிறார் தேவி அரசநாயகம்.
தமக்கு தொடர்ந்து உதவும் Rotary Club, Second Harvest, Daily Bread ஆகியோரையும், City of Toronto’s Public Health, அரசு மானியம், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி கூற மறக்கவில்லை.
எங்களுடைய உணவு வங்கிக்கு மட்டும் அல்ல, உங்களுக்கு அருகில் இருக்கும் உள்ளூர் உணவு வங்கியை ஆதரிக்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாகும்.
-ரம்யா சேது-
(தேசியம் சஞ்சிகையின் April 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)