இந்த விவகாரம் முடிந்து பல காலமாகிவிட்டாலும், அவ்விவகாரம் கொதிநிலையில் இருந்தபோது எழுதப்பட்டது இக்கட்டுரை. கொதிநிலையில் இருந்த கஞ்சி, தற்போது ஆறிய கஞ்சிதான் என்றாலும், இந்த விவகாரத்தின் பின் பல ‘உலகப்பிரச்சனை’களை நாம் கடந்துவந்திருந்தாலும், ஒரு பதிவுக்காக பலரது வேண்டுகோளுக்கிணங்கி இந்த “அம்பிகை சீவரத்தினம்” – “கதி. செல்வகுமார்” விடயத்தை இம்முறை அலசிப் பார்க்கலாம்.
“பாதிக்கப்பட்டவர் அம்பிகையா அல்லது செல்வகுமாரா?” என்பது ஒரு கேள்வி. மறுபுறத்தில் ‘அம்பிகை செல்வகுமார்’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டு அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு வலுச்சேர்த்த உணர்வாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கனடாவில் ஒரு நடைப்பயணமே அம்பிகைக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் பாதித் தூரம் தாண்ட முன்னரே ‘அம்பிகை செல்வகுமார்’ என்ற பெயரில் பாதி கழன்றுவிட்டது.
இந்த விடயத்தில் இரண்டு தனி மனிதர்களின் சொந்த வாழ்க்கை – அவர்கள் தனிமனிதர்கள் என்ற புரிதலையும் தாண்டி – ஒரு சமூகமே விவாதிக்கும் Issueவாக மாறியிருந்ததைக் கண்டபோது நம்மில் பலரும் விக்கித்துப் போனோம். தனிவாழ்வில், தனிப்பட்ட அளவில் பாதிக்கப்பட்டவராக இருப்பவர்களைக் கண்டால் மற்றவர்களுக்கு அனுதாபம் வருவது உண்மைதான். இங்கு பாதிக்கப்பட்டது அம்பிகையா? செல்வக்குமாரா?? உண்ணாவிரதத்தினால் உணர்வுமயமான மற்றவர்களா???
சிந்தித்துப்பார்த்தால், “உலகளாவியரீதியில் கொண்டு செல்லப்பட்ட இந்த விடயத்தில் செல்வகுமாரின் பெயர்தான் சமூகக் காரணம் எதுவுமின்றி அதிகம் கெட்டுப் போய்விட்டது” என்பது என் கணிப்பு.
மேற்கத்தேய நாடு ஒன்றில் வாழும், ஒருமுறை விவாகரத்தான ஆண்மகன் ஒருவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் பழகிப் பார்த்திருக்கிறான். ஏனோ உறவு சரிப்பட்டு வரவில்லை. அதைத் தவிர்த்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முனைகிறான். பிறகு? அவனால் தவிர்க்கப்பட்ட பெண், தன்னோடு அவனுக்கு திருமணமே நடந்துவிட்டதுபோல காட்டிக்கொள்ள முனைகிறாள்.
அவன் பெயரைத் தன் பெயரோடு இணைத்து உலகளாவிய அளவில் பிரச்சாரம் செய்ததொரு போலித்தனம் கண்டு, என்ன செய்வது என்பது புரியாத பரிதாபகரமனா நிலைமை (Dilemma) அவனுக்கு ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் உலகளாவிய தமிழ்ச் சமூகமே அவனைக் கேள்வி கேட்கவும் ஆரம்பிக்கிறது. “ஒரு பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிவிட்டான்” என்றும், “பெண் பித்தன்” என்றும், “பெண்களிடம் பணம் பிடுங்குகிறான்” என்றும்கூட ஆதாரம் எதுவும் பொதுவெளியில் காட்டப்படாமல் அவனுக்கெதிரான கருத்து பரவ விடப்படுகிறது. (தன்னை ஏமாற்றிவிட்டதாக ‘கதி. செல்வகுமார்’ மீது ‘அம்பிகை சீவரத்தினம்’ பொதுவெளியில் குற்றச்சாட்டு வைத்ததாகத் தெரியவில்லை.) இதற்கிடையே சிலர் அவனுக்கெதிராகத் தீர்ப்பும் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
இந்தக் கதையை வைத்தே இயக்குனர் செல்வகுமார் ஒரு படம் எடுக்கலாம். “அந்த மாதிரிப் போகும்” இந்தக் கதையில் உணர்ச்சிவசப்படாமல் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: அது “சம்பந்தப்பட்ட இருவரும் விடலைப் பருவத்தினர் அல்லர்!” என்பதுதான். பேரன், பேர்த்தி எடுக்கும் வயதினராக அல்லவா அவர்கள் இருவரும் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, யார் யாரை ஏமாற்றி விட்டார்கள் என்று நாம் நொந்து கொள்வது?
நல்லவேளை… இந்தப் பிரச்சனையின் ஆரம்ப நிலையிலேயே செல்வகுமார் ஒரு தன்னிலை விளக்க வீடியோவை வெளியிட்ட காரணத்தால் பலவித ஊகங்களும், சந்தேகங்களும் ஆதாரமற்று எழுவது தவிர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த வீடியோவிற்கும் விமர்சனங்கள் எழுந்தன. வேடிக்கை என்னவென்றால், “இந்தத் தன்னிலை விளக்க வீடியோ பொதுவெளிக்கு வந்தது தவறு” என்பவர்கள்கூட ‘அது ஏன் தவறு?’ என்பதை தர்க்க ரீதியாக விளக்கிச் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் கனடாவிலிருக்கும் யாரும் செல்வகுமார் குறித்து தமது கருத்தை வெளிப்படையாக பொது வெளியில் சொல்வதாகவும் இல்லை. அதனை தவிர்க்கிறார்கள். (இந்த ‘கதி. செல்வகுமார்’ ஒரு ‘கொதி’ செல்வகுமார் என்பது தெரிந்து அடக்கி வாசிக்கிறார்கள் போலும்)
அம்பிகை, தனது பெயரோடு செல்வகுமாரின் பெயரை இணைத்துத் தன் பெயரை அறிவித்த நிலையில் அரசியல் உண்ணாவிரதம் இருக்கச் சென்றது மிகத் தவறு! இதை நாம் சொன்னால் சிலர் சண்டைக்கு வருகிறார்கள். அப்போ “அப்படி அறிவித்தது சரியா?” என்று நாம் திருப்பிக் கேட்டால் மழுப்புகிறார்கள்.உண்மையில் இந்த Issue சம்பந்தப்பட்ட தன்னிலை விளக்கம் ஒன்று அம்பிகையிடமிருந்தும் வந்திருக்க வேண்டும். ஆனால் அம்பிகை அதைச் செய்யவில்லை. அதைச் செய்யவும் மாட்டார்.
இன்றைய நிலையில், “ஏனடாப்பா செல்வகுமாரின் பெயரை தனது பெயரோடு இணைத்துக் கொண்டேன்” என அம்பிகை வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை. செல்வகுமாரின் பெயரை தனது பெயரோடு அம்பிகை சீவரத்தினம் இணைத்துக் கொண்டதன் மூலம் தன் பெயரை அவரே கெடுத்துக் கொண்டும் விட்டார்.
இதற்கிடையே, செல்வகுமாரின் திருமண தினத்தன்று அம்பிகையின் உண்ணாவிரதம் உச்சக்கட்டம் அடைந்தது! “அம்பிகையின் வீட்டின் முன்பாக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் தற்செயலானதா?” என்றதொரு பதில் தெரியாத கேள்வியும் இன்று வரை உண்டு. இந்தக் கேள்வி ஒன்றுதான் அம்பிகையையும், செல்வகுமாரையும் இணைத்துப் பார்க்கும் Issue. அதைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கேள்விகளையுமே ‘தனிநபர்கள் இருவருடைய தனிப்பட்ட விடயங்கள்’ என்று ஒரு குழந்தையால்கூட நிறுவ முடியும்.
‘தனிநபர் வேறு. Issue வேறு’ என்பதை புரிந்து கொள்ளாத தன்மையால்தான் அம்பிகையின் உண்ணாவிரத காலத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஆம். “தனிநபர் வேறு. Issue வேறு”. இதைப் புரிந்து கொள்ள பயிற்சி வேண்டும். புரிந்து கொள்வதும் பலருக்குச் சுலபமானதல்ல என்பதால் இவ்விடத்தில் ‘தனிநபர் வேறு. Issue வேறு’ என்பதை புரிய வைக்க ஒரு உதாரணம் சொல்லலாம். தாமரை இலைமேல் நிற்கும் தண்ணீர் இலையோடு சேர்ந்து தென்பட்டாலும் அது தனியானது.
இதில் “தண்ணீரானது தாமரை இலைமேல் நிற்பது” என்பதுதான் Issue. “தண்ணீர் = தனிநபர்” என்றும் புரிந்து கொள்க. தண்ணீர் குறித்துப் பேசுவதுதான் தனிநபர்வாதம் என்பதாகும்.
தனிநபர்களின் பாதிப்புள்ள Issueக்களை பேச முனையும் எவரும் Communitarianism சொல்வதுபோன்ற நிலையின் அடிப்படையில் நின்றே அந்த Issueக்களையும், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் தனிநபர்களையும் நோக்குதல் வேண்டும். Communitarianism என்பது ஒரு தத்துவமாகும். தனிநபருக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை Communitarianism வரையறுக்கிறது. ஒரு நபரின் அடையாளமும், ஆளுமையும் சமூக உறவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதை இந்தத் தத்துவம் வெளிப்படுத்துகிறது.
தனிநபர்வாதத்தை அந்தத் தத்துவம் சிறிய அளவாகவே கவனத்தில் எடுக்கிறது.
இது போக, அம்பிகையின் போராட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுதியவர்களில் பெரும்பான்மையினர் அம்பிகையின் குடும்பப் பின்னணியை விபரித்து எழுதியவர்களாகவும் இருக்கிறார்கள். (செல்வகுமாரை விமர்சித்து அல்ல) உண்ணாவிரதம்தான் Issue என்றால், அதை நாகரீகமாக விமர்சித்து எழுதுவதிலிருந்தும் பலர் தவறியிருக்கிறார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் அம்பிகைமீது ஒரு சிலர் மதிப்பிழந்து போயிருக்கலாம். அதற்காக அம்பிகை சம்பந்தப்பட்ட உண்ணாவிரத Issueக்களிலும் நாம் மதிப்பு இழக்கலாமா? கூடாது.
மொத்தத்தில் “தனிநபர் வேறு, Issue வேறு” என்பதைப் புரிந்து பிரச்சனைகளை நோக்கும் பயிற்சி நம் சமூகத்தில் குறைவாக இருக்கிறது என்பதையே அம்பிகை – செல்வகுமார் விவகாரத்தில் பலரும் தெரிவித்த கருத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவுதான்.
ஆக, “அம்பிகையும் செல்வகுமாரும் செய்தது விவகாரமா? விவாகரத்தா??” என்பது இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தனி விடயமே தவிர அது ஒரு சமூகப் பிரச்சனை அல்ல என்பதே முடிவாகும். இந்த நிலையில் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு “இந்த Issue குறித்து நாம் ஏன் பேசவேண்டும்?” அல்லது பேசவே கூடாது என்று ஒருவேளை யாராவது நம்மிடம் பிரச்சனை தரவும் கூடும்.
அப்படி நடந்தால் என்ன செய்வது? எதுவும் பேசாமல் International, Impartial and Independent Mechanism (IIIM) மட்டும்தான் இதுகுறித்து எம்மிடம் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி தப்பி ஓடிவிடுவதுதான் தற்போது நமக்கிருக்கும் ஒரே வழி.
வேறென்ன செய்ய…
‘கனடா’ மூர்த்தி
(தேசியம் சஞ்சிகையின் March 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)