Ontario மாகாணம் இதுவரை காலத்தில் பதிவு செய்யாத ஒரு நாளுக்கான அதிகூடிய COVID தொற்றுக்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது.வெள்ளிக்கிழமை Ontario சுகாதார அதிகாரிகள் 4,227 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இதற்கு முன்னர் January மாதம் 8ஆம் திகதி ஒரு நாளில் 4,249 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அது ஒரு தரவு பின்னிணைப்பு காரணமாக ஏற்பட்ட அதிகரித்த பதிவுகளாகும்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தொற்றுகளின் அறிவித்தலுடன் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி 3,259 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களுக்கு முன்னர் இந்த சராசரி 2,552 ஆக இருந்தது. Ontarioவில் வெள்ளிக்கிழமையுடன் தொற்றின் புதிய திரிபினால் மொத்தம் 11,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை Ontarioவில் 18 மரணங்களும் பதிவாகின. Ontario வைத்தியசாலைகளில் மொத்தம் 1,492 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் குறைந்தது 552 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் 359 ventilatorரின் உதவியுடன் சுவாசிப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் Ontario மாகாண வைத்தியசாலைகள் அனைத்து அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை இரத்து செய்யவுள்ளன. COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையுடன் Ontarioவில் மொத்தம் 3 இலட்சத்து 78 ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 ஆயிரத்து 512 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. Ontarioவில் வியாழக்கிழமை இரவு 8 மணியுடன் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 598 பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது