இந்த மாத பிற்பகுதியில் COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கும் என அறிவிக்கப்படுகின்றது
இன்று (வியாழன்) வெளியான புதிய modelling தரவுகளின் மூலம் இந்த விபரம் வெளியானது. தொற்றின் புதிய திரிபுகளினால் இந்த அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பரவலை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாத நிலையில் March மாத இறுதிக்குள் நாளாந்தம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தொற்றுக்களை பதிவு செய்யும் சாத்தியகூறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 18 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்றின் மூன்றாவது அலையைத் தவிர்ப்பதற்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவும் தடுப்பூசிகளும் தேவைப்படுவதாக கூறப்படுகின்றது. மாகாணத்திற்கு ஆலோசனை வழங்கும் சுகாதார நிபுணர்கள் இன்று இந்தத் தகவலை தெரிவித்தனர்.
Boxing தினத்தில் விதிக்கப்பட்ட மாகாண ரீதியிலான முடக்கம், கடந்த மாதம் வழங்கப்பட்ட வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான உத்தரவு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் Ontarioவில் தொற்றின் அதிகரிப்பை குறைத்துள்ளதாக தொற்று அறிவியல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. தொற்றின் பல திரிபுகள் பரவி வருவதை சுட்டிக்காட்டும் அந்தக் குழு தற்போது அறிவிக்கப்படும் தொற்றுக்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வரை புதிய திரிபுகளின் தாக்கத்தால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.
இதனால் இந்த மாத பிற்பகுதியில் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.