1994ஆம் ஆண்டில் ஷியாம் செல்வதுரை எழுதிய நாவலின் தலைப்பிலேயே, அந்த நாவலைத் தழுவி வெளியாகவுள்ள “Funny Boy” என்னும் கனடிய திரைப்படம் 1980களில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில், தனது பாலியல் அடையாளத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் சிறுவனை பின்தொடர்கின்றது.தெற்காசியாவிலுள்ள பால்புதுமையினரின் சிக்கல்களை முனைப்புறுத்திக் காட்டும் ஓர் அற்புதமான படைப்பாக இந்த படம் மேற்கு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு வெளியீடுகளில் கூறப்பட்டுள்ளது – ஆயினும் உண்மையில் இது அதற்கு நேர்மாறானது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கை அரசாங்கம் அதன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பெயர்போனது. தீவுத் தேசத்தின் இரண்டு பிரதான இனங்களான தெற்கின் சிங்கள மக்களுக்கும் வடக்கு, கிழக்கின் தமிழ் மக்களுக்கும் இடையில் 25 ஆண்டு காலமாக இடம்பெற்ற மிக நீண்ட குரூரமான உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்தால் பல ஆண்டுகளாக தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையானது, அப்பகுதிகளில் குடிமக்களுக்கு கிடைக்கக்கூடிய வளங்களில் முற்றிலும் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. வடக்கில் யாழ்ப்பாணம், கிழக்கில் மட்டக்களப்பு போன்ற நகரங்கள் இனப்படுகொலையின் வேதனையையும் துன்பத்தையும் எதிரொலித்துக் கொண்டிருந்த வேளையில், தெற்கில் கொழும்பு செழிப்புற்றது.
“Funny Boy” வன்முறைகள் இடம்பெற்றதை ஒப்புக்கொண்டாலும், அது ஒரு சலுகை பெற்ற, கொழும்பை மையமாகக் கொண்ட கோணத்தில் இருந்தே அதனைச் செய்கின்றது. ஷியாம் செல்வதுரையின் எழுத்து நடை இனிமையானது, சுவையான கலாசாரம் சார் நிகழ்வுகளுடன் கூடிய எளிமையான எடுத்துரைப்பாக அது வகைப்படுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவரது கதைகள் பெரும்பாலும் புரிதல் குறைந்தவை. பாதி தமிழரும் பாதி சிங்களவருமான எழுத்தாளர் ஷியாம் செல்வதுரை, இலங்கையின் வணிகத் தலைநகரில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது உயிருக்கு அஞ்சாமல், அல்லது தொடர்ச்சியாக அரசாங்கத்தின் அனுசரணையில் இடம்பெறும் குண்டுவெடிப்புகளுக்கு தனது குடும்பத்தை இழக்கும் பயமில்லாமல், நிறுவனமயமாக்கப்பட்ட ஆண்-பெண் பாலுறவே இயல்பானதென ஏற்கும் சிந்தனையை கேள்விக்குள்ளாக்கும் திறன் அவருக்கு இருந்தது.
ஷியாம் செல்வதுரையின் மேல்தட்டு குமிழிக்கு வெளியே, இது தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாத தமிழ் பால்புதுமையினருக்கு கிடைக்காத ஆடம்பரமாகும். அவரது கதைகள் அவர் மிக அரிதாக தொடர்புகொள்ளும் மக்கள் கூட்டமொன்றுக்காக பேசுவதைப் போன்று இருக்கும். இலங்கை அரசாங்கத்தின் கைகளால் இலட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்ததை இன ஒற்றுமை, பாலியல் கண்டுபிடிப்பு பற்றிய ஒரு கதைக்கான வெறும் பின்னணியாக “Funny Boy” கையாள்வதாகத் தோன்றுகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தோ-கனடிய திரைப்பட இயக்குனர் தீபா மேத்தா (Deepa Mehta) இக்கதையை ஒரு திரைப்படமாக்குவதற்காக கையில் எடுத்தார். வலதுசாரி இந்து தேசியவாதத்தை கண்டனம் செய்வதில் முற்போக்காளராகவும் முன்நிற்பவராகவும் உள்ள தீபா மேத்தா, ஏனைய சர்வாதிகார மேலாதிக்கத்தை கண்டனம் செய்வதில் ஒரு மோசமான பின்னணியைக் கொண்டுள்ளார்.
உதாரணமாக, அவர் 2012 இல் கனடிய-பிரிட்டிஷ் திரைப்படமான “Midnight’s Children”ஐ இலங்கையில் படமாக்க முடிவு செய்தார். காரணம் 1947இல் இந்தியா – பாகிஸ்தான் பிளவுற்றபோது இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட அப்படத்தை இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ படமாக்கினால் எதிர்ப்புகளையும் தணிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும் என அவர் அறிந்திருந்தார். மேலும், படப்பிடிப்பின் போது, அவர் இலங்கையின் ஆளும் வம்சத்தின் உறுப்பினர்களும், தீவின் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் அனுசரணையாளர்களுமான ராஜபக்ஸ குடும்பத்துடன் தொடர்புகளைப் பேணி பணியாற்றினார்.
தீபா மேத்தா “Midnight’s Children”ஐ படமாக்கியபோது, வசதியான மேடையமைப்பாக இருந்ததைத்தவிர இலங்கையில் வேறொன்றும் இருக்கவில்லை. Funny Boy இயக்கத்தின் போது, திடீரென்று நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொண்டவராய் அவர் தன்னை காட்டிக்கொண்டுள்ளார். இதை நாம் பல வழிகளில் காண்கிறோம். ஒன்று, Funny Boy இன் பிரதான நடிகர்களில் நிம்மி ஹரஸ்கமவைத் (Nimmi Harasgama) தவிர தமிழர்கள் உள்ளடக்கப்படவில்லை. லண்டன் பல்கலைக்கழகம், நியூயார்க் பிலிம் அகாடமி ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்ற நிம்மி ஹரஸ்கம கொழும்பைச் சேர்ந்த பாதி சிங்களவரும் பாதித் தமிழருமாவார். படத்தில் வரும் ஒவ்வொரு தமிழ் கதாபாத்திரமும் வெள்ளைத் தோலுடன் உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு இலங்கையின் மேல்தட்டினரிடையே மாத்திரம் பகிரப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இலங்கை கிரிக்கெட் வீரரும் இலங்கை இராணுவத்தின் ஆதரவாளருமான குமார் சங்கக்கார ஆதரவைத் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், படத்தில் பேசப்படும் தமிழ், திரைப்பட முன்னோட்டத்தில் காட்டப்படும் காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, மோசமான தவறுகளோடு உள்ளது.
அமெரிக்காவில் திரைப்படத்தின் உரிமைகளைப் பெற்ற Ava DuVernay, படத்தின் உலகளாவிய விநியோகத்தையும் கையாளவுள்ளது. 93வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான கனடிய நுழைவாக Funny Boy தெரிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், கனடா 300,000 தமிழர்களின் வாழ்விடமாகவுள்ளது. ஒவ்வொரு January மாதமும் தமிழ் மரபு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றது. எனினும், தமிழ் வரி செலுத்துவோரின் பணமானது தமிழ் கலாசாரத்தையும் வேதனைகளையும் விற்பனைச் சரக்காக்குவதில் வேரூன்றியுள்ள ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கு பங்களித்துள்ளது என்பதே இதன் அர்த்தம்.
தெற்காசியாவில் இந்தியா ஒரு பிராந்திய சண்டியனாக இருப்பதால், இந்திய சினிமா பெரும்பாலும் இந்தியர் அல்லாத தெற்காசிய மக்களின் கதைகளை ஒரு மேல்தட்டுவர்க்க இந்தியர்களின் கோணத்திலேயே சித்திரிக்கிறது. தெற்காசியா பற்றி ஒரு பெரும்பான்மைவாத, ஒற்றைப்படையான பார்வையை முன்வைப்பதானது, இப்பிராந்தியத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை உலகின் பிற பகுதிகள் பார்க்கும் விதத்தை வடிவமைக்கிறது. இந்தியரான தீபா மேத்தா, தமிழர்களின் போராட்டத்தை எளிமைப்படுத்தி, அதை இலாபத்திற்காக பயன்படுத்தும் இந்த அணுகுமுறையை Funny Boyயில் கையாண்டுள்ளார்.
வரலாற்று ரீதியாக, தமிழர்கள் தீவிர பிரிவினைவாதிகள் என்று இழிவுபடுத்தப்படுகிறார்கள், பொருத்தமற்றவர்கள் என்று புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது பரிதாபகரமானவர்கள் என்று ஆதரிக்கப்படுகிறார்கள். பொதுப்போக்கில் தமிழர் பற்றிய எடுத்துரைப்புக்கள் அரிதாகவே தமிழ் மக்களால் சொல்லப்பட்டிருக்கின்றன.
தீபா மேத்தாவின் Funny Boy ஆபத்தானது, இது தவறான விளக்கங்களை பெருப்பித்துக் காட்டுவதுடன், உயர் வர்க்க சந்தர்ப்பவாத திரைப்பட இயக்குநர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் சுரண்ட முடியும் என்ற கருத்தையும் பலப்படுத்துகிறது. திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த கதை சொல்லும் ஊடகம், மேத்தா அதை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
Funny Boy, 2020 December மாதத்தின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
(Visvajit Sriramrajan ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்- தமிழில் Bella Dalima)