Ontarioவின் Progressive Conservative அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை தங்கள் முதல் பெருந்தொற்றுக் கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தது. அவற்றின் சிறப்பம்சங்களாவன:
அதிகூடிய செலவுப் பதிவு
அரசாங்கத்தின் நிதித் திட்டத்தில் 187 பில்லியன் டொலர் செலவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 30 பில்லியன் டொலர்கள் பெருந்தொற்று தொடர்பான செலவீனங்களாகவுள்ளன.
மாகாணத்தில் 38.5 பில்லியன் டொலர் துண்டுவிழும் தொகையாக (பற்றாக்குறை) இருக்கும்.
தொற்றுநோய் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்து, வரவிருக்கும் ஆண்டுகளில் மாகாணத்தின் துண்டுவிழும் தொகை மாற்றமடைவதைக் காணக்கூடிய மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களை வரவு செலவுத் திட்டம் வகுக்கிறது.
தற்போதைக்கு, பொருளாதார வளர்ச்சி மிதமான விகிதத்தில் முன்னேறினால், 2021-2022 ஆம் ஆண்டுகளில் 33.1 பில்லியன் டொலர் துண்டுவிழும் தொகையாகவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 28.2 பில்லியன் டொலர் குறைந்தளவு துண்டுவிழும் தொகையாகவும் அது கணித்துள்ளது.
நிதித் திட்டம், சமநிலைக்கான பாதையை வகுக்கவில்லை. அது 2021 வரவுசெலவுத் திட்டத்தில் வரும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
மருத்துவமனைச் செலவு
பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இவ்வாண்டில் மருத்துவமனைத் துறையில் 2.5 பில்லியன் டொலர்களை அதிகமாக செலவழித்துள்ளதாக மாகாண அரசு கூறியுள்ளது.
சுகாதார நெருக்கடியினால் ஏற்பட்ட செலவுகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 572 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
COVID-19 பரிசோதனை மையங்களை செயற்படுத்துவது, சில நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு உதவுவது உள்ளடங்கலாக, ஒன்டாரியோவின் பெருந்தொற்று தொடர்பான விடயங்களைத் தொகுக்க மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அறுசை சிகிச்சைகளை இரத்து செய்வதைத் தவிர்த்துக்கொண்டு, பெருந்தொற்றின் இரண்டாம் அலைத் தாக்கத்தால் அதிகரித்துள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் கொள்திறன் பிரச்சினைகளுடன் போராடவேண்டியுள்ளது.
முதியோர் வரிக்கழிவு
முதியோர் தமது இல்லங்களில் நீண்டகாலம் தங்கியிருக்க உதவும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு புதிய வரிக்கழிவு உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வருமானம், 2021 ஆம் ஆண்டில் வரி செலுத்த வேண்டியுள்ளதா என்பவற்றைப் பொருட்படுத்தாமல், 10,000 டொலர்கள் வரை இது தகுதிவாய்ந்த சீரமைப்புகளில் 25 சதவீதத்தை மீளளிக்கும்.
குறைந்தபட்ச கழிவு 2,500 டொலர்களாக நிர்ணயிக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
சக்கர நாற்காலி சாய்ப்பிடைகளை பொருத்துதல், வழுக்காத தரைகள், மேலதிக மின் விளக்குகளை பொருத்துதல் போன்றவற்றிற்கு தற்காலிக நடவடிக்கையாக பயன்படுத்தலாம்.
மின்சார செலவு
நடுத்தர, பெரிய வர்த்தகங்கள் மற்றும் தொழில்துறை வணிகங்களுக்கு மின்சார செலவுகளில் ஒரு பகுதியை மானியமாக வழங்குவதாக மாகாண அரசு கூறியுள்ளது.
இந்த வணிகங்களுக்கான மின்சார செலவுகள், மாகாணத்தை மற்ற அதிகார வரம்புகளுடன் போட்டிபோட முடியாததாக ஆக்குகிறது என்று அது கூறுகிறது.
2021 ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் இந்த மாற்றத்தினால், தொழில்துறை வணிகங்கள் 14 சதவீதத்தையும் வர்த்தக வணிகங்கள் அவற்றின் சராசரி கட்டணத்தில் 16 சதவீதத்தையும் மிச்சப்படுத்தும்.
2040 வரை செலவுகள் படிப்படியாகக் குறைந்து வருவதால், அடுத்த ஆண்டு 1.3 பில்லியன் டொலர் செலவாகும் என்று மாகாண அரசு மதிப்பிட்டுள்ளது.
நீண்ட கால பராமரிப்பு
பாரமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கு சராசரியாக நான்கு மணிநேர தினசரி நேரடி கவனிப்பை வழங்குவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டதை வரவு செலவுத் திட்டம் உறுதிப்படுத்துகிறது.
பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ள போதும், அந்தத் திட்டத்திற்கான செலவுகள் இதுவரை மதிப்பிடப்படவில்லை.
2024-2025-இற்குள் அதற்கான தரநிலையை எட்ட முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இத் தரநிலையானது, தற்போது நீண்டகால பராமரிப்பில் உள்ளவர்கள் பெறும் 2 மணித்தியாலம் 45 நிமிட சராசரி நேரடிப் பராமரிப்பு நேரத்திற்கு மேலான அதிகரிப்பாக இருக்கும்.
வீட்டிலிருந்து கற்பதற்கான செலவுகள்
பெற்றோருக்கு உதவியாக, வீட்டிலிருந்து கல்வி கற்பதற்காகும் மேலதிக செலவுகளுக்கான நிதியை வரவு செலவுத் திட்டம் புதுப்பித்துள்ளது.
இந்தத் திட்டம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு 200 டொலர்களையும் சிறப்புத் தேவையுடைய குழந்தை அல்லது இளைஞருக்கு 250 டொலர்களையும் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் செலவிடப்பட்ட 378 மில்லியன் டொலர்களுக்கு மேல், அந்தத் திட்டத்திற்கு மாகாணத்திற்கு 380 மில்லியன் டொலர்கள் செலவாகும்.
பயிற்சிப்புத்தகங்கள், பாடசாலைப் பொருட்கள், தொழில்நுட்பம் போன்ற செலவுகளை ஈடுகட்ட பெற்றோருக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
Wine, Beerருக்கான வரி முடக்கம்
Wine, Beer ஆகியவற்றின் மீதான திட்டமிடப்பட்ட வரி உயர்வை அரசாங்கம் 2022 வரை முடக்கியுள்ளது.
பெருந்தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விருந்தோம்பல் துறை சார்ந்த வணிகங்களுக்கு உதவ இந்த நடவடிக்கையை எடுப்பதாக மாகாண அரசு குறிப்பிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட வரி உயர்வை அரசாங்கம் முன்பு முடக்கியிருந்தது.
இந்த நடவடிக்கையால் 2020-2021 ஆம் ஆண்டில் மாகாணத்திற்கு 4 மில்லியன் டொலர்களும் அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் 40 மில்லியன் டொலர்களும் செலவாகும்.
நாட்டுப்புற ஆலலை இணைய வசதி (RURAL BROADBAND)
நகர்ப்புற ஆலலை இணைய அணுகலை விரிவுபடுத்துவதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக 680 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என மாகாண அரசு குறிப்பிட்டுள்ளது.
புதிய நிதியை முந்தைய முதலீடுகளுடன் இணைக்கும்போது, ஆலலை விரிவாக்கத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்கள் இருக்கும் என வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் Ontario முழுவதும் 220,000 வீடுகளுக்கும் வணிகங்களுக்குமான ஆலலை அணுகலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட ஆலலை, கைபேசி சேவைகளின் அவசியத்தை பெருந்தொற்று வலியுறுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.