தேசியம்
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த ஆட்சேபனை!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த தனது ஆட்சேபனையை நிமால் விநாயகமூர்த்தி முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு புதன்கிழமை (17) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாக அவர் தேசியத்திடம் தெரிவித்தார்.

இந்த கடிதத்தில் தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி நிராகரிக்கப்பட்டது ஒரு அரசியலமைப்பு மீறல் என நிமால் விநாயகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தனது வேட்பு மனு நிராகரிப்பு நீதிக்கு புறம்பானதாக அமைந்ததுடன், தனது மூன்று தவணை கால செயல்பாட்டை அவமதித்தது, தன்னை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது என அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது வேட்புமனுவை நிராகரிக்க  குறிப்பிட்ட விடயங்கள் எவையும் வேட்பாளர் தகமையில் இல்லாதவை என கூறிய நிமால் விநாயகமூர்த்தி, தனது வேட்பு மனு நிராகரிப்பு நீதியற்றது என கூறினார்.

கனடிய தேர்தல் ஆணையகம் அமைச்சரவை அல்லது பிரதமர் பணிமனையால் இயக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் கலைக்கப்பட்டு, புதிய ஆணையாளரை நியமித்து, மீண்டும் கனடாவுக்கான தேர்தலை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேர்மையை காப்பதுடன், எனக்கு  நீதியையும் பெற்றுத் தந்தது, எனது அவமானத்தையும் நீக்க வேண்டி நிற்கின்றேன்” என தலைமை தேர்தல் ஆணையாளரை நிமால் விநாயகமூர்த்தி அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 ஆவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

கனடாவில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன .

இதில் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனுவும் அடங்குகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு தான் போட்டியாளராக இருப்பதை தவிர்ப்பதற்காக தனது வேட்பு மனு தகுந்த காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிமால் விநாயகமூர்த்தி தேசியத்திடம் தெரிவித்திருந்தார்.

நடைபெறவுள்ள கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

May மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் விபரங்கள் புதன்கிழமை (17) வெளியாகும் என தேர்தல் ஆணையர் செவ்வாய்க்கிழமை இரவு தேசியத்திடம் தெரிவித்தார்.

Related posts

Conservative தலைமைக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார்: Patrick Brown

Lankathas Pathmanathan

காசாவில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan

Ontarioவில் அதிகரிக்குமா தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment