ஒன்றுகூடல்கள், பேரணிகள், பிரார்த்தனைகள், பொது நிகழ்வுகள் என உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் தேசிய நாளைக் குறிக்கும் நிகழ்வுகள் பலவும் வெள்ளிக்கிழமை (30) இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.
Orange Shirt தினம் என அழைக்கப்படும் மத்திய விடுமுறை கடந்த ஆண்டு நிறுவப்பட்டது
வதிவிட பாடசாலைகளில் இணைய வேண்டிய கட்டாயத்தில் இறந்த குழந்தைகள், உயிர் பிழைத்தவர்கள், நீடித்த அதிர்ச்சியால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், சமூகங்களை நினைவில் கொள்ள இந்த தினம் உருவாக்கப்பட்டது.
Niagara Fallsஇல் நடைபெற்ற ஒரு சூரிய உதய நிகழ்வில் பல்வேறு முதற்குடியின பிரதிநிதிகளுடன் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.
நிகழ்வு நடந்தபோது அமைதியாக நின்றிருந்த பிரதமர் பின்னர் வதிவிட பாடசாலை மாணவர்களுடன் உரையாடினார்.
பின்னர் வெள்ளி காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்றைய நாளின் முக்கியத்துவம் குறித்து Trudeau கருத்து தெரிவித்தார்.
வடுக்கள் ஒரே இரவில் குணமடையாது என கூறிய Trudeau நல்லிணக்கத்தை நோக்கி ஒன்றாக செயல்பட உறுதியளித்தார்.
Ottawaவில் ஆளுநர் நாயகம் Mary Simon, 100 பாடசாலை மாணவர்களையும் ஊழியர்களையும் Rideau மண்டபத்திற்கு வரவேற்று அவர்களிடம் நல்லிணக்கம் குறித்து உரையாற்றினார்.
ஆளுநர் நாயகமாக கனடாவில் பதவியை வகித்த முதல் முதற்குடியின நபர் Simon என்பது குறிப்பிடத்தக்கது.
தவிரவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இந்த தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்றன.
கனடாவில் 150 ஆயிரத்திற்கும் அதிகமான முதற்குடியின குழந்தைகள் குடியிருப்புப் பாடசாலைகளில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டில் மாத்திரம், நாடு முழுவதும் உள்ள வதிவிடப் பாடசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளமற்ற கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.