March மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை Ontarioவில் மிகக் குறைந்த COVID தொற்றுக்கள் பதிவாகின.
செவ்வாய்க்கிழமை 2,073 தொற்றுக்களும் 15 மரணங்களும் Ontarioவில் பதிவாகின. இதற்கு முன்னர் March மாதம் 24ஆம் திகதி Ontarioவில் 1,571 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. கடந்த இரண்டு வாரங்களில் செவ்வாய்க்கிழமை ஐந்தாவது தடவையாக மூன்றாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.
திங்கட்கிழமை 2,716, ஞாயிற்றுக்கிழமை 3,216, சனிக்கிழமை 2,864 என Ontarioவில் தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. தொற்றுகளின் ஏழுநாள் நாளாந்த சராசரி 2,914 ஆக செவ்வாய்க்கிழமை பதிவானது. தற்போது வைத்தியசாலையில் 1,782 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அவசர சிகிச்சை பிரிவில் 802 பேர் உள்ளனர்.
Ontarioவில் 18 வயதுக்கு மேற்படவர்களில் 50 சதவீதமானவர்கள் வரை குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளதாக வெளியான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை வரை Ontarioவில் 3 இலட்சத்து 96 ஆயிரத்து 787 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.