தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

அறிவகமும் அரசியலும்!

அரசியல் (Conservaative) கட்சிக்கு தனது மாணவர்கள் ஊடாக ஆள் (உறுப்பினர்) சேர்க்கின்றதா அறிவகம்?

கனடாவில் இன்று இரண்டாவது பலம் வாய்ந்த கட்சியாக (நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்) உள்ள Conservative கட்சி ஒரு புதிய தலைமையை விரைவில் தேர்ந்தெடுக்கவுள்ளது. அதற்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒருவர் Conservative கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இம் முறை Conservative கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு வாக்களிக்க ஒருவர் விரும்பினால் அவர் May மாதம் 15ஆம் திகதிக்குள் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இறுதி நேரத்தில் உறுப்பினர்களை இணைப்பில் பலரும் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தனர்.

இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டால் – அதன் மூலம் வெற்றி வாய்ப்பை எளிதில் பெற்றுவிடலாமென்பது அவர்களது கணக்காகும். இது பலரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு விடயம் தான். ஆனாலும் புதிய உறுப்பினர்களை எவ்வாறு அல்லது எங்கு இணைக்க வேண்டும் என்பதில் சில அடிப்படை நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

“அறிவகம் கனடா” பாடசாலையால் மின்னஞ்சல் ஊடாக மாணவர்களுக்கு (பெற்றோருக்கு) Conservative கட்சியின் உறுப்பினராக இணைவதற்கான விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையாளர் பார்வைக்கு வந்த அவ்வாறானதொரு மின்னஞ்சல் May மாதம் 13ஆம் திகதி (புதன்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களுக்கு முகவரியிடப்பட்டிருந்த மின்னஞ்சலில் “இந்த Conservative கட்சி உறுப்பினர் விவரங்களை பெற்றோருக்கு அனுப்புமாறு அறிவகம் என்னிடம் கேட்டுள்ளது” (Arivakam asked me to forward this Conservative Party membership details to parents) என அந்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்த மின்னஞ்சலுடன் குடும்ப உறுப்பினர் விண்ணப்பப் படிவம் (Family Membership Application) ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களை யாரோ ஒருவர் (அல்லது ஒரு குழுவினரின்) நலனுக்காக கட்சி ஒன்றில் இணைக்க முயலும் இந்த நடைமுறை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நகர்வாகும். கட்சி அரசியலும், மதப்போதனைகளும் கல்விக் கூடங்களுக்குள் பிரவேசிப்பது ஆபத்தான ஒரு நகர்வு.

அங்கு கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தமது மின்னஞ்சல் முகவரிகளை பாடசாலையுடன் பகிர்ந்திருப்பது மாணவர்களின் கல்வி நகர்வுகள் குறித்த தொடர்புக்காக மாத்திரமே. தவிர அரசியல் கட்சிக்கு உறுப்பினர்களை இணைக்கும் வகையான கோரப்படாத அரசியல் தொடர்புகளுக்காக அல்ல. இது போன்ற தொடர்புகள் சட்டத்திற்கும் எதிரானவை.

அறிவகம் சிறார்களுக்கு தமிழ் கற்பிக்கும் ஒரு கல்விக் கூடமாகும். இள மழலையர் (JK) முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவருக்குத் தமிழ் கற்பித்தலில் மூலம் புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்து வரும் அடுத்த சந்ததியினருக்கு இனப் பண்பாடுகளை அறிமுகப்படுத்துவதே அறிவகத்தின் நகர்வாக இருக்க வேண்டும். அதை விடுத்து தனி நபர் சுய நலத்திற்காக கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கின்ற இவ்வாறான நகர்வுகள் பொது வெளியில் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது மட்டுமல்லாது அனைத்து வகைகளிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அறிவகம் சேகரித்த Conservative கட்சிக்கான புதிய உறுப்பினர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் அவசியமானது. இந்த வாக்குகளுக்காக என்ன “கை மாறு” கோரப்படுகின்றதோ என்ற கேள்வியும் முன் வைக்கப்பட வேண்டியது.

இந்த நிலையில் பின்வரும் கேள்விகளுக்கு அறிவகம் பொது வெளியில் உடனடியாக பதில் கூற வேண்டும்

1) இது போன்ற தொரு மின்னஞ்சலை மாணவர்களுக்கு அனுப்புவதற்கு யார் கோரியது?

2) மொத்தம் எத்தனை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டன?

3) இந்த விண்ணப்பங்கள் யார் மூலமாக கட்சியின் தலைமையிடம் கையளிக்கப்பட்டன?

4) இந்த விண்ணப்பங்களுக்கான பணத்தை யார் வழங்கியது?

4) எந்தத் தலைமை வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்கான முயற்சி இது?

இங்கு விண்ணப்பங்களுக்கான பணத்தையார் வழங்கியது –   எந்தத் தலைமை வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்கான முயற்சி இது – போன்ற கேள்விகளுக்கு அடிப்படையில் ஒரு காரணம் உள்ளது.

Conservative கட்சிக்கான தலைமைத்துவத் தேர்தலில் தமிழர்கள் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் வழி முறையில் கேள்விகள் எழுப்பப்படுவது இது முதல் தடவையல்ல. கடந்த (2017) Conservative கட்சியின் தலைமைத்துவ போட்டியின் போதும் தமிழர்களினால் சேகரிக்கப்பட்ட 1,351 புதிய உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் மோசடி காரணமாக அனுமதிக்கப்படவில்லை. அப்போது தலைமை வேட்பாளரான Kevin O’Leary, தேர்தல், நிதிச் சட்டங்களை மீறும் வகையில் பரவலான வாக்கு மோசடி இடம் பெறுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த மோசடி Toronto பகுதியில் உள்ள தமிழ்கள ஒருங்கிணைப்பாளர்களை (field co-ordinators) உள்ளடக்கியதாக பொது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சட்ட விரோதமான முறையில் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டதாகக் கூறப்படும் தமிழர்கள் Maxime Bernierரின் பிரச்சாரத்தை ஆதரித்தவர்கள் என்பதும் அப்போதே சுட்டிக் காட்டப்பட்டது.  அனுமதிக்கப்படாததாகக் கண்டறியப்பட்ட 1,351 பேருக்கான உறுப்பினர் நிலை இரண்டு IP முகவரிகள் மூலம் அநாமதேயமாக கொள்வனவு செய்யப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மோசடி குற்றச்சாட்டு அப்போதே முழுத் தமிழ் கனடிய சமூகத்தின் மீதும் மோசமான ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தியது.

அதே போல் அறிவகம் சர்ச்சைகளில் அகப்படுவதும் ஒன்றும் புதிதல்ல.  கடந்த January மாதம் கனடாவின் தமிழ் மரபு மாதத்தின் ஒரு அங்கமாக Torontoவில் “தமிழியல் விழா” நிகழ்ந்தது. இந்தத் தமிழியல் விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சிறீனிவாசன் முதன்மை விருந்தினராக அழைத்த நிகழ்வின் ஏற்பாட்டில் இணைந்து கொண்டவர்கள் தான் அறிவகம் கனடா. இந்தத் தமிழியல் விழாவை முன்னின்று நடத்தியது கனடியத் தமிழர் தேசிய அவை என்ற பொது அமைப்பு. நிகழ்வின் ஏற்பாட்டில் இணைந்து கொண்டவர்கள் கனடாத் தமிழ் கல்லூரி,  அறிவகம் கனடா போன்ற தமிழ்ப் பாடசாலைகள்.

ஒரு மதத்தின் அடிப்படையிலான கட்சியின் உறுப்பினரான வானதி சிறீனிவாசனை தமிழியல் விழாவிற்கு எந்த விதமான கூச்சங்களும், தயக்கங்களை இன்றி வர்க்க பாசத்துடன் அழைத்து மேடையமைத்து, அழகு பார்த்து, கொண்டாடி வழியனுப்பியவர்கள் இவர்கள். தமிழ் மொழியை புறக்கணிக்கும் ஒரு கட்சியின் பிரதி நிதி வானதி சிறீனிவாசன் என்பது பற்றிய அக்கறை இந்தத் தமிழ் பாடசாலைக்கு இருக்கவில்லை. தமிழ் மொழி எதிர்ப்பு என்பது தொடர்ந்தும் தமிழகச் சூழலில் கொதி நிலையில் உள்ளது. அது குறித்த எந்த வித அக்கறையும் இல்லாத ஆபத்தான ஒரு நகர்வாக இது அன்றே விமர்சிக்கப்பட்டது.

எமது அடுத்த தலை முறைக்கு வழிகாட்டுகின்றோம் என ஆரம்பிக்கப்பட்டாலும் அறிவகம் இப்போது முற்றுமுழுதாக ஒரு வர்த்தக இலாபத்தை மட்டுமே நோக்கான வியாபாரமாக மாறி வருகின்றது. அதற்கான பொறுப்புக் கூறல் பொது வெளியில் இல்லை. பொது மக்கள் பணத்தில் தனி நபர்களை அதிபர்களாக்கும் கனடிய தமிழர் வரலாற்றின் இன்னுமோர் கருப்புப் புள்ளி தான் அறிவகம்.

2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையம் – Canadian Tamil Social And Economic Foundation (CTSAEF) என்ற பெயரில் ஒரு தர்ம நிலையம் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு அறிவித்தல் வெளியானது.   இந்த அமைப்பின் உருவாக்கம் ஊடாக கனடாவில் பொது மக்கள் பணத்தில் இயங்கிவரும் ஆறு நிறுவனங்கள் ஒன்றாக இணையும் என்ற தொனியில் இந்தத்தர்ம நிலையம் குறித்து மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது. இந்த தர்ம நிலையத்தில் பெயரிடப்பட்ட ஒரு அமைப்பு இதே அறிவகம் கனடா. ஆனாலும் இந்த தர்ம நிலையம் இயங்கு நிலையை அடையவே இல்லை. அதற்கான காரணியாக கூறப்பட்ட விடயம் இந்ததர்ம நிலையத்தில் பெயரிடப்பட்ட அமைப்புக்களின் ஒற்றுமையின்மையாகும். அதாவது பொதுமக்கள் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு காலப் போக்கில் தனி நபர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள் ஊடாகப் பெறப்படும் தமது தனிப்பட்ட வருமானத்தை விட்டுக் கொடுக்க அந்த ஆறு நிறுவனங்களின் தலைமைகளும் தயாரில்லை.

அறிவகம்தெடர்ந்துதமிழுக்கும்சமூகத்திக்கும்எதிராகமுன்னெடுக்கும்அடாவடித்தனமானநகர்வுகளின்பட்டியலில்இப்போதுபுதிதாகஇணைந்துள்ளதுதான் Conservative கட்சிக்கானஇந்தஉறுப்பினர்சேர்க்கையாகும்.இதுகனடியதமிழர்கள்மீதுகறைபூசவல்லது.

தவிரவும் Conservative கட்சியின் தலைமையும், புதிய தலைமைக்கான தேர்தல் குழுவும் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 2017ஆம் ஆண்டின் தலைமைத்துவ போட்டியின் போதும் நிகழ்ந்த புதிய உறுப்பினர்களின் விண்ணப்ப மோசடி போல இதுவும் உருவெடுக்கலாம்.

அறிவகம் போன்ற பாடசாலைகள் இன்றைய கனடிய தமிழ் சூழலுக்கு அவசியமானவை. அவை கனடிய தமிழர் சமூகத்தில் செயல்படுத்த வேண்டிய பல வேலைத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கனடாவில் தமிழர்களுக்கான ஒரு நூலகத்தை மீளவும் நிறுவி அதனை நிர்வாகிப்பதாக இருக்க வேண்டும். கனடாவில் உலகத் தமிழர் அமைப்பு தடை செய்யப்பட்ட போது, அதன் நூலகத்தில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான புத்தகங்கள் பெட்டிகளில் அடைபட்டு அறிவகத்திடம் உள்ளது. இந்தப் புத்தகங்கள் கறையானுக்கு இரையாவதற்கு முன்னர் அவற்றை பாதுகாக்கும் வகையிலும் அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் ஒரு நூலகத்தை நிறுவ வேண்டியதே அறிவகம் போன்ற பாடசாலைகளின் குறிக் கோளாக இருக்க வேண்டும்.

கனடாவில் தமிழ் நூல்களை அதிகம் கொண்டிருந்த தேடகம் நூலகம் எரியூட்டப்பட்ட பின்னர் ஒரு தமிழ் நூலகத்திக்கான தேவை இன்றும் உள்ளது. அதற்குத் தேவையான முழுமையாக தமிழ் நூல்களும் அறிவகத்திடம் உள்ளது. அதை விடுத்து உங்கள் கைவசம் உள்ள நூல்கள் இப்போது அநாதரவாக பெட்டிகளில் அடைபட்டு இருப்பதற்கு காரணியான உலகத் தமிழர் அமைப்பு மீதான தடையை கனடாவில் நடை முறைப்படுத்திய Conservative கட்சிக்கு நீங்களே புதிய உறுப்பினர்களை சேகரித்துக் கொடுப்பது எவ்வளவு முரணான ஒரு நகர்வு என்பதை அறிவகம் உணர்கின்றதோ தெரியவில்லை.

எது எவ்வாறாகினும் பாடசாலைகளுக்கு கட்சி அரசியலுக்கு இடமளிப்பது பொரும்பான்மையானவர்களின் கருத்தியலுக்கு எதிரானது. பொரும்பான்மையானவர்களின் கருத்தியலுக்கு எதிரான அல்லது அதனை மீறி ஒரு விடயம் செயற்படுத்தப்படுகின்றது என்பது ஓர் சர்வாதிகாரப் போக்கின் எடுத்துக்காட்டாகும்.

அறிவகமும் அதனை இயக்குபவர்களும் அதன் பின்னணியில் உள்ளவர்களும் இதனைப் புரிந்து கொள்ளட்டும்!

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Gaya Raja

Hollywood தொடரில் கனடிய தமிழ் மாணவி மைத்திரேயி ராமகிருஷ்ணன்

thesiyam

Leave a Comment