போரில் வலிகள் ஆண்டுகள் கடந்தும் இன்னும் என்னைவிட்டு அகலாமல் உள்ளது. எறிகணைகள், துப்பாக்கி ரவைகள், அழுகுரல்கள் என போரின் எச்சங்கள் இன்னமும் மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. யுத்தம் குடித்த பூமியில் இருந்து நெடுந்துாரம் புலம் பெயர்ந்து வந்த போதிலும் போர் என்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் இட்டுச் சென்றுள்ளதாக உணர்கின்றேன். நானும் அந்த வட்டத்தில் இருந்து வெளியே வர முயற்சிக்கவில்லை. பத்து ஆண்டுகளின் பின்னர் என்னிடமிருந்து போரின் வாடை முழுமையாக மறந்து விடுவதற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இறுதி நாட்கள் குறித்து என் நினைவில் உள்ளவற்றைப் பதிந்து விட வேண்டும் என்ற முயற்சியினைத் தொடர்கின்றேன்.
தொடர் தாக்குதலில் April மாதம் 25ஆம் திகதி நான் காயமடைந்திருந்தேன்……..
2009 May 15 முள்ளிவாய்க்காலில் இருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்து விட்டனர். நான் பெருங்கடல் பக்கமாக இருந்த வட்டுவாகல் விடத்தல் பற்றைகள் நிறைந்த ஒரு இடத்தில் தங்கியிருந்தேன்.. எறிகணைகள் அருகருகே வீழ்ந்து வெடித்தாலும் என்னால் எழும்பி ஓட முடியவில்லை.
2009 ஆரம்பம் முதல் May 17 வரையிலான காலப் பகுதியில் அதிகரித்து போன இறந்த உடலங்ளை பார்த்து நெஞ்சம் கல்லாகியிருந்தது. எங்களுக்கு என்ன நடக்க போகின்றது என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனை நாள் உயிருடன் இருக்கப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. எனக்கு மட்டுமல்ல முள்ளிவாய்க்காலில் பெரும் காயங்களுக்கு உள்ளானவர்களின் நிலை அவ்வாறே இருந்தது.
2009 May 16
அழு குரல்கள் ஒப்பாரிகள் என இந்த நாள் விடிந்தது. மீண்டும் மீண்டும் சலித்துப் போன காட்சிகள். “இண்டைக்கு உள்ள போகலாம் என்று சொல்லுறாங்கள்” என மக்களின் பேச்சுக்களில் இருந்து அறிய முடிந்தது.
நந்திக் கடலால் மக்கள் வெளியேற ஆரம்பித்திருந்தனர். நாங்கள் பெருங்கடல் பக்கமாக தங்கியிருந்தோம். இதனால் நந்திக் கடல் பற்றி சிந்திக்கவில்லை. எங்கள் அருகில் இருக்கின்ற மக்கள் எங்கே போகிறார்களோ அங்கே போவோம் என்பது எமது எண்ணம். அன்று மாலை திடீரென எனக்கு அருகில் இருந்த பனை வடலிகள் எறிகணைகள் பட்டு எரிந்து கொண்டிருந்தன.
“Army கடற்கரையால சுட்டு சுட்டுவாறான்” என கடற்கரைப் பக்கத்தில் இருந்து மக்கள் பிரதான வீதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். Army அருகில் நின்றிருந்ததை உணர முடிந்தது. நாங்களும் பிரதான வீதியைச் சென்றடைந்தோம். வாழ்க்கையில் அப்படியொரு சனக் கூட்டத்தை வீதியில் நான் பார்க்கவில்லை. எவ்வளவு தூரத்திற்கு சனம் நின்றதோ தெரியவில்லை. அந்தச் சனக் கூட்டத்திற்குள்ளும் எறிகணைகள் வீழ்ந்து மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள்.
”அவங்கள் இன்னும் மக்களை எடுக்கவில்லை”என யாரோ சொல்வது கேட்டது. இரவு 7 மணி. நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் பார ஊர்தி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெடி பொருட்கள் இருந்தன. படையின ர்மக்களை நோக்கி இடையிடையே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வண்ணமிருந்தனர். படையினர் தாக்குதலில் எமக்கு அருகில் இருந்த பார ஊர்தி எரிய ஆரம்பித்தது. ”வெடி பொருட்கள் வெடிக்க போகுது எல்லாரும் ஓடுங்கோ” என்று குரல் வரவே அவ்வளவு நேரமும் படுத்திருந்த நான் எவ்வாறு எழுந்து ஓடினேனோ தெரியவில்லை. ஆனால் ஓடினோன். அன்று ஓடாமல் இருந்திருந்தால் அன்றே செத்திருந்திருப்பேன். நந்திக் கடல் பக்கமாக ஓடிய நான் விடத்தல் மரங்கள் இருக்கின்ற பகுதிக்கு அருகில் விழுந்து விட்டேன். என்னால் அதற்கு மேல் ஓட முடியவில்லை.
2009 May 17அதிகாலை
இரு தரப்பினருக்கும் இடையில் சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அநேகர் அடுத்த கணத்தின் அச்சத்தில் இருந்தார்கள். வானம் மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரமது. வட்டுவாகல் பாலத்தினை அண்மித்த பகுதிகளில் முதல் நாள் சென்ற மக்களில் பலர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களது உடலங்கள் வீதியோரங்களில் அழுவார் அற்று கிடந்தது. ஆனாலும் நாங்கள் வட்டுவாகல் பாலத்தை நோக்கியே நடந்து சென்றோம். எங்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
”இராணுவம் இன்னும் மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலிடத்து அனுமதிவரும் வரைக்கும் உள்ளே விடமாட்டார்களாம்” என மக்களின் பேச்சுக்களில் இருந்து தெரிந்தது.
அதிகாலை 5 மணியினை தாண்டிய நேரம்.
முல்லைத்தீவு நகரப் பகுதியில் இருந்து நந்திக் கடல் பக்கமாக பல்குழல் பீரங்கிகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் சத்தமும் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தது.
தொடர்ச்சியாக பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது. ”இயக்கம் இறங்கி அடிச்சுக் கொண்டு போகுதாம்” மக்கள் பேசிக் கொண்டார்கள். இனி ஒன்றுமே மிஞ்சப் போவதில்லை என்பதை வட்டுவாகல் பாலத்தை நோக்கி சென்ற மக்களின் அமைதியே கட்டியம் கூறியது.
இராணுவம் உள்ளே மக்களை அனுமதிக்க ஆரம்பித்தது.
வட்டுவாகல் பாலத்தினை தாண்டி 300 மீற்றர் தூரத்தில் வீதியோரத்தில் படுத்திருந்தேன். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. காயமடைந்தவர்களை மட்டும் தனித்தனியே இராணுவம் உள்ளே எடுத்துக் கொண்டிருந்தது. இதனால் நான் என் குடும்பத்தினரிடம் இருந்து தனித்து விடப்பட்டேன். அந்த இடத்தில் காயமடைந்தவர்களை இராணுவம் உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தது. உழவு இயந்திரம் 500 மீற்றர் சென்ற பின்னர் ஒரு பேரூந்தில் ஏற்றப்பட்டோம்.
எங்களை அன்றே பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் பேரூந்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் எங்களுடன் பேரூந்தில் காயடைந்த நிலையில் இருந்த ஒரு கைக்குழந்தை இறந்து போனது. அதற்கு அங்கு இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் புலனாய்வு அதிகாரியே காரணம். எவ்வளவு கெஞ்சியும் எந்த வைத்தியரும் அந்த கைக் குழந்தையின் உதவிக்கு வரவில்லை.
அந்த இராணுவ புலனாய்வு அதிகாரி ஒரு முஸ்லிம் இனத்தவர் என்பதை அவர் பேசிய தமிழ் அடையாளப்படுத்தியது. திடீரென பேரூந்தில் அவர் ஏறினார். அனைவரையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு இறங்குனார். ஏதோ நடக்கப் போகின்றது என்பது மாத்திரம் உறுதியானது. அனைவர் முகத்திலும் ஒரு விதசலனம். சிறிது நேரத்தில் நான்கு புலனாய்வு பிரிவினருடன் மீண்டும் பேரூந்தில் ஏறினார் அந்த அதிகாரி. அங்கேயே விசாரணை ஆரம்பமானது. எல்லாரிடமும் விபரங்கள் கேட்டு எழுதப்பட்டது.
அந்தப் பேரூந்தில் இருந்த இரண்டு குடும்பங்களும் என்னையும் தவிர மிகுதி அனைவருமே காயமடைந்த போராளிகள். இயக்கப் பெயர். எந்தப் பிரிவு. சொந்தப் பெயர். சொந்த இடம். தற்காலிக இடம் உட்பட்ட விபரங்கள் கேட்டு எழுதப்பட்டன. (இடை இடையே தூசன வார்த்தைகள் வேறு). பேரூந்தின் ஓரத்தில் காயமடைந்த பெண் போராளி ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஒரு புலனாய்வு அதிகாரி தனது காலால் அந்தப் பெண் போராளியின் வயிற்றில் உதைந்தார். அதன் பின்னர் அந்தப் போராளியின் முனகல் சத்தம் கேட்கவே இல்லை.
எங்களோடு இருந்த இரண்டு குடும்பங்களும் முல்லைத்தீவு செல்வபுரத்தினைச் சேர்ந்தவர்கள். அந்தக் குடும்பங்களில் இளம் பெண் ஒருவர் மடியில் தனது குழந்தையை அணைத்த படி “என்ர பிள்ளையைக் காப்பாற்றுங்கோ பிள்ளையைக் காப்பாறறுங்கோ” எனக் கதறிய படி இருந்தார். அந்தக் குழந்தை காயமடைந்திருந்து. இரத்தப் போக்கினை கட்டுப்படுத்துவதற்கான முதலுதவிச் சிகிச்சை மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் பேரூந்தில் ஏறிய அந்தக் குழந்தையை மேலதிக சிகிச்சைக்கு கொண்டு செல்ல புலனாய்வு அதிகாரி மறுத்து விட்டார்.
நாங்கள் அனைவரும் மீண்டும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். நாங்கள் எங்கே கொண்டு செல்லப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. சில மணித்தியாலங்களின் பின்னர் இராணுவ முகாம் ஒன்றின் முன்னால் பேரூந்து நிறுத்தப்பட்டது. எனக்கு முழுமையான சுயநினைவு இருக்கவில்லை. அதனால் அங்கு நிகழ்ந்தவை நினைவில் இல்லை.
2009 May 18 காலை
இராணுவ முகாமில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். பேரூந்தில் இருந்து இறங்கிய நான் வைத்தியசாலை புல் தரையிலேயே விழுந்து விட்டேன். என்னால் எழும்ப முடியவில்லை. நெஞ்சிலிருந்து ஊனம் வடிந்து கொண்டிருந்தது. என்னையாரோ தூக்கிச் சென்றார்கள். அந்த வைத்தியசாலையிலேயே எனக்கு தொடர்ந்து இரண்டு சத்திரசிகிச்சைகள் இடம் பெற்றது.
இன்று நான் கனடாவில் நலமாக இருந்து முள்ளிவாய்க்கால் இறுதி நாட்கள் குறித்து நினைவு கூறுகின்றேன் என்றால் அதற்கு காரணம் கடுமையான மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் செயலாற்றிய முள்ளிவாய்க்கால் வைத்தியர்களின் அர்ப்பணிப்பான பணிதான்.
சுரேன் கார்த்திகேசு
2010ஆம் ஆண்டு MV Sun Sea கப்பல் மூலம் கனடா வந்தடைந்த அகதிகளில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு May மாதம் 17ஆம் திகதி வரை முள்ளிவாய்க் காலில் வாழ்ந்தவர். தற்போது Vancouverரில் வசித்து வரும் இவர் ஈழ நாதம் பத்திரிகையில் செய்தியாளராக இறுதி வரை கடமையாற்றியவர். முள்ளிவாய்க்காலில் யுத்த மீறல் குற்றமாக சுட்டிக் காட்டப்படும் cluster குண்டுத்தாக்குதல் இடம் பெற்றதற்கான நேரடிச் சாட்சியம் இவர்.