கனடாவில் Inforce Foundation என்றஅமைப்பு COVID-19 பேரிடர் காலத்தில் பல உதவிகளை முன்னிலை நலம் காப்போருக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றது.
Inforce Foundation என்ற அமைப்பானது உலகளாவிய முறையிற் செயற்படும் இலாப நோக்கற்ற அமைப்பாகும். உலகில் வாழும் அனைவரும் வாழச் சிறந்த இடமாக இவ்வுலகை மாற்றி அமைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என நம்பும் அமைப்பு Inforce Foundation. அந்த வகையில் உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொழுதும், போராலும் பேரிடராலும் பாதிக்கப்படுவோருக்குக் கை கொடுப்பதிலும் மன நிறைவு அடைகிறது Inforce Foundation.
Inforce Foundation அமைப்பிடம் COVID-19 பேரிடர் காலத்தில் அவர்களின் உதவிகள் குறித்து தேசியம் பேசியதில் இருந்து …..
தேசியம்: COVID-19 பேரிடர் காலத்தில் Inforce Foundation எடுத்த முயற்சிகள் யாவை?
Inforce Foundation: மருத்துவமனைகளிலும் நீண்ட காலப் பராமரிப்பு இல்லங்களிலும் பணியாற்றுபவர்களுகுத் தரமான உணவை வழங்கும் சேவையைச் செய்து வருகிறோம். அந்த வரிசையில், Scarborough General Hospital, Scarborough Grace (Birchmount) Hospital, Centenary Hospital ஆகிய மருத்துவமனைகளுக்கும் Sienna Altamont Community Care, Rockcliffe Care Community and Ina Grafton Gage Home ஆகிய நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களுக்கும் அவர்களின் தேவைக்கு ஏற்றபடி மதியம் அல்லது இரவு உணவை வழங்குகிறோம்.
உணவு வழங்குதல் மட்டுமல்லாமல் அவர்கள் நீண்ட நேரம் பணியைச் செய்யும் போது ஏற்படும் சிரமங்களில் ஒன்றான முக மூடியணிவதால் காதைச் சுற்றி ஏற்படும் வலியைக் குறைக்க முக மூடியைப் பின்னால் இழுத்துக் கொழுவ உதவும் கொழுக்கிகளையும் வழங்குகின்றோம்.
மருத்துவப் பணியாளர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர்களுக்குத் தேவையான உணவு, பயனுள்ள பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறோம். இத்தோடு நின்று விடாமல், அவர்களுக்காக இன்னும் பல வசதிகளையும் வருகின்ற நாட்களிற் செய்து கொடுப்போம் என நம்புகிறோம்.
தேசியம்: முன்னிலைத் தொழிலாளர்களுக்கு உதவ Inforce Foundation ஏன் முடிவு செய்தது?
Inforce Foundation: COVID -19 என்ற கொள்ளை நோயானது பல்லாயிரக்கணக்கானோருக்குத் தொற்றி இருக்கும் இவ் வேளையில், இந்த முன்னிலைப் பணியாளர்கள் தன்னலமற்ற சேவைகளை வழங்குகிறார்கள். நோயின் தொற்று அதிகரித்திருக்கும் இவ் வேளையில், உயிர்காக்கும் தேவதைகளாக இவர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில், தம் குடும்பத்தாருக்குத் தொற்றிவிடக் கூடாது என்பதற்காக அவர்களைப் பிரிந்து தனியே வாழ்வது மட்டுமல்லாமல், சில வேளைகளில் 12 மணித்தியாலத்திற்கு மேல் பணியாற்றுகிறார்கள். தன்னலமற்றுச் செயலாற்றும் அவர்களுக்கு நாம் செய்யும்கை மாறாக, தரமான உணவு வழங்குத்தல் போன்ற சேவைகளைச் செய்கிறோம்.
தேசியம்: முன் நிலைத்த தொழிலாளர்களுக்கான உணவு வழங்குதலைத் தவிர,தற்போது வேறு என்ன முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன?
Inforce Foundation: GTA பகுதியிற் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்னும் அதிகமான முக மூடிக் கொழுக்கிகளைத் தயாரித்து வழங்குவதோடு அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற் கொண்டுள்ளோம். அது மட்டுமல்லாமல், இத் தொற்று நோயாற் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களது குடும்பத்தார் சென்று பார்க்க முடியாத சூழலில், இணையத்தினூடாகத் தொடர்பு கொள்ள உதவும் வகையில் ipad, tablet, smart phone போன்ற தொழில் நுட்பக் கருவிகளைச் சேகரித்து வருகிறோம்.
தேசியம்: Inforce Foundation ஊடாக இது வரைஉதவியைப் பெற்றவர்கள் யார்?
Inforce Foundation: இது வரை இந்தியாவிலும் ஈழத்தின் வட கிழக்கு மாகாணங்களிலும் உள்ள பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி உதவியை வழங்கியுள்ளோம்.
கனடாவில், Heart and Stroke Foundation, The Daily Bread Food Bank ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து நன் கொடையளித்து வருகிறோம். அத்தோடு எமது தற்போதைய முயற்சியான உணவு வழங்கும் திட்டத்தினூடாக, Scarboroughவில் அமைந்துள்ள மூன்று மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கும் Markham Souffville Hospital பணியாளர்களுக்காகவும், மூன்று மூதாளர் பராமரிப்பு இல்லங்களிற் பணியாற்றுவோருக்கும் உதவியுள்ளோம்.
தேசியம்: இந்த முயற்சிக்கு யாராவது நிதியுதவி வழங்குகிறார்களா?
Inforce Foundation: பல நன் கொடையாளர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அத்தோடு, சமூக உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் பல வழிகளில் எமக்குக் கை கொடுக்கிறார்கள். தன்னல மற்ற இவர்களைப் போன்றவர்களின் உதவியின்றி எம் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியாது.
மேலதிக விபரம் அறிய https://inforcefoundation.org/அல்லது https://www.facebook.com/inforcefoundation/