கனடியர்களாக எங்களில் பலருக்கும் தெரியாத அல்லது எங்களில் பலரும் அறிந்து கொள்ள விரும்பாத கனடா ஒன்று எங்களுக்கு அருகிலேயே உள்ளது. அது கனடாவின் பூர்வீகக் குடிகள் வாழும் கனடாவின் முதல் குடி மக்களுக்கான நிலப் பகுதி. புதிய நாடொன்றினுள் புலம் பெயர்ந்த ஓர் அகதிக் குடி இனமாக இந்தத் தெரியாத கனடாவை தெரிந்து கொள்வது குறித்து தமிழர்களாக நாம் கவனம் செலுத்துவதோ அல்லது அக்கறை காட்டுவதோ இல்லை.
இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர் வீக நிலம் தமிழர்களுக்கே மீளளிக்கப்பட வேண்டும் என புலம் பெயர் தேசத்தில் இருந்தும் கோரிக்கை முன் வைக்கி்ன்ற நாம் கனடாவின் பூர்வீகக் குடி மக்களின் கோரிக்கைகளை அறியாமலே வாழ்கின்றோம் என்பது தான் எத்தனை அபர்த்தம்.
எங்களில் பெரும்பாலானோர் கனடாவின் பூர்வீகக் குடிகள் வாழும் இந்தக் கனடாவைப் பார்க்கவில்லை. Sudan நாட்டை விட வேலையில்லாதவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது இந்தக் கனடாவில் தான். 2014ஆம் ஆண்டுக்கான Sudan நாட்டின் வேலையற்றோர் விகிதம் 19.50சதவீதமாகும். ஒருவருடைய சராசரி வருமானம் Latvia நாட்டுக்கு இணையாக இருப்பதும்(13,655 அமெரிக்க Dollars) இந்தக் கனடாவில் தான்.
Russiaவை விட பிறந்த குழந்தையின் இறப்பு வீதம் மோசமாக உள்ளதும் இதே கனடாவில் தான். Russiaவின் பிறந்த குழந்தையின் இறப்பு வீதம் 10.5 சதவீதம் என்கிறது புள்ளி விபரம். இவை அனைத்தும் கனடாவின் பூர்வீகக் குடிகள் எதிர் கொள்ளும் சவால்களின் நீண்ட பட்டியலின் ஓர் ஆரம்பம் தான். இங்கு சமூக நீதி என்பது பெயரளவில் மாத்திரம் தான் உள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு (sewage system) பலவும் செயல் இழந்த நிலையில் தான் உள்ளன. Ontario மாகாணத்தின் Gull Bay First Nation மற்றும் Marten Falls First Nation மற்றும் Saskatchewan மாகாணத்தின் Kahkewistahaw First Nation என இதற்கான உதாரணங்கள் சிலவற்றை முன் வைக்கலாம்.
முதல் குடி மக்களின் (First Nations) பகுதிகளில் தீவிபத்தினால் ஏற்படும் மரணங்கள் கனடாவின் ஏனைய பகுதிகளை விட 10 மடங்கு அதிகமானது என கனடாவின் பழங்குடியினர் அமைச்சு (Aboriginal Affairs and Northern Development Canada) மேற் கொண்ட தீ பாதுகாப்பு மீதான மூலோபாயம் குறித்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும் பல முதல் குடி மக்களின் பகுதிகளில் தீயணைப்புப் பிரிவினரின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன.
2010ஆம் ஆண்டு முதல் கடந்த வருடத்தின்(2017) ஆரம்பம் வரையிலான காலப் பகுதியில் கனடாவின் பூர்வீகக் குடிமக்கள் வாழும் இந்தச் சமூகங்களில் 170க்கும் அதிகமான மரணங்கள் தீயினால் ஏற்பட்டுள்ளதாக Toronto Star பத்திரிகை தாம் மேற் கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் புள்ளி விபரத்தை வெளியிட்டது.
இங்கு மருத்துவ வசதிகளும் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. அரிதாகக் கிடைக்கின்ற மருத்துவ உதவிகளும் மிகத் தொலைவிலேயே உள்ளன. போதை மருந்துக்கு இங்கு வாழ்பவர்கள் அடிமையாவதும் குடி போதை பழக்கங்களும் நாளாந்தம் அதிகரிக்கின்றன. TB தொற்று நோய் தொற்று நிலையை தாண்டியுள்ளது.
HIV நோய்த் தொற்றின் விகிதம் Nigeriaவை விட அதிகமாக உள்ளது. இல்லை, நாங்கள் அறிந்த, நாங்கள் வாழ்கின்ற கனடா இதுவல்ல. அது வேறு கனடா. இது வேறு கனடா. உயர் நிலைப் பாடசாலைகளுக்கு மது போதை எடுத்துச் செல்லும் தவறுகளுக்காக நாங்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவதில்லை. எங்கள் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு அஞ்சி வாழ்வதில்லை. நீதி அமைப்பானது இரக்கத்துடன் எங்களை நடத்துகின்றது. ஒவ்வொரு நடவடிக்கையிலும் எங்கள் வாழ்க்கை சிறந்தது. எங்கள் கனடா உலகில் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாகும்.
இன்னுமொரு விடுமுறைக் கொண்டாட்டத்தை முடித்துள்ள நாங்கள் எங்களுக்குத் ”தெரியாத” அந்தக் கனடாவில் இருந்து மிக நீண்ட துாரத்தில் மனதளவில் இருக்கின்றோம். இது எங்களில் பலர் விடுகின்ற தவறு தான். அந்தக் கனடாவைப் பற்றியோ அல்லது அங்கு வாழ்கின்ற கனடாவின் முதல் குடிமக்கள் பற்றியோ உண்மையில் எங்களுக்கு அக்கறை இல்லை. அது இருக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
எங்களில் அநேகர் அந்தக் கனடாவை ஒரு தடவையேனும் பார்க்கவே இல்லையே. அங்கு வாழும் எவரையும் எங்களுக்கு தெரியாது. செய்தி ஊடகங்கள் கூட மிக அரிதாகவே அந்தக் கனடா பற்று பேசுகின்றன. அவ்வாறு பேசப்படும் தருணங்களிலும் கனடியப் பிரதமரோ அல்லது வேறு ஒரு அரசியல் வாதியோ, அந்தக் கனடியர்கள் குறித்து உண்மையிலேயே அக்கறையுண்டு என்றும், அவர்கள் விடயங்களை சிறப்பாககையாளுகின்றோம் என்றும் உத்தரவாதங்கள் மாத்திரம் தரப்படுகின்றன. ஆனாலும் அனைத்தையும் இழந்தவர்களுக்கு உத்தரவாதங்கள் மாத்திரம் போதாது என்பது புலம் பெயர் தமிழர்களுக்கு தெரியாததா என்ன? ஆனாலும் உண்மைகளும் தரவுகளும் இவை தான். எங்களில் பலருக்கும் “தெரியாத” கனடாவில், அருந்துவதற்கு பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் 89 சமூகங்கள் உள்ளன. ஒரு குழந்தை உயர் நிலைப் பாடசாலையின் பட்டதாரியாவதை விட பாலியல் ரீதியாக தாக்கப்படுவதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
Somaliaவை விட படுகொலை விகிதம் மோசமாக உள்ளது. சிறை வாசத்தின் விகிதம் உலகிலேயே மிக உயர்ந்ததாகவும் உள்ளது. இதுவே உங்கள் கனடாவாக இருந்தால் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் பிள்ளைகள் இந்தத் ”தெரியாத” கனடாவில் வாழ்ந்தால் உங்கள் ஆத்திரத்தை கற்பனை செய்து பாருங்கள்.
இவை அனைத்தும் குறித்து நீங்கள் அக்கறை கொண்டதாய் ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.
இலங்கதாஸ் பத்மநாதன்