தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் இலங்கதாஸ் பத்மநாதன் கட்டுரைகள்

எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) இவை முக்கியமான நாட்கள்.

கனடிய தமிழர் பெருவிழா என்னும் Tamil Fest கனி அந்தரத்தில் ஆடும் நிலையில் ஒவ்வொரு அடியையும் பேரவை அவதானமாக எடுத்து வைக்கிறது என்பது அவர்களின் அண்மைய கால நகர்வுகள் எடுத்துரைக்கின்றன.

அதன் அண்மைய உதாரணம் ” கனடிய தமிழர் பேரவையின் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்பான திட்டமிடலை மேற்கொள்வதற்கான வியூகங்களை உருவாக்கும் ஒரு அமர்வு” என்ற நகர்வு!

Trudeau கொத்து

 

முன் எப்போதும் அறியாத வகையில், பொது வெளியில் அறிவித்து – ஆனாலும் மூடிய அறையில் – இதுபோன்ற ஒரு அமர்வை நடத்த வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என பேரவையின் நிர்வாகம் ஒரு வருடத்திற்கு முன்னர் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் காலச்சக்கரம் வேகமாக உருண்டு இந்த நிலையில் அவர்களை கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.

இந்த அமர்வு குறித்த அறிவித்தலில் உடனடியாக கவனத்தை ஈர்த்த விடயம்; “கனேடிய தமிழ் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருங்கிணைந்ததும் உள்ளடக்கியதுமான சூழலை வளர்ப்பதற்கு CTC உறுதிபூண்டுள்ளது” என்ற வாசகமாகும்.

இது இப்போது புதிதாக உதித்துள்ள ஞானம் – எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

அது உண்மையாக வேண்டுமானால், முதலில் ஆர்வமுள்ள கனடிய தமிழர்களுக்கு அங்கத்துவ உரிமையை மறுக்கும் முடிவில் மாற்றத்தை CTC உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மூடிய அறைக்குள் நடத்தி முடித்தாக கூறிக்கொள்ளும் அமர்வை தொடர்ந்து “கனேடிய தமிழ் சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை நன்கு புரிந்து கொள்வதற்காக” ஒரு விரிவான பொது அறிவுரை கோரலை நடத்த விரும்பினால் அந்த செயல்முறையில் “கனேடிய தமிழ் சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை நன்கு புரிந்து கொள்ளும்” பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும். வெறுமனவே பொதுவெளியில் அடையாளம் காணப்படாத/காட்டப்படாத அங்கத்தவர்களுடன் மாத்திரம் இந்த செயல்முறை முன்னெடுக்க படுமேயானால் அது மீண்டும் ஒரு “இமாலய பிரகடனம்” ஆகிவிடும் அபாயம் அதிகம் உள்ளது.

இமாலயப் பிரகடனம், தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலை குறித்த கோட்பாடு, உலகத் தமிழர் பேரவையில் (GTF) இருந்து விலகல் என அண்மைய காலத்தில் பேரவை எடுத்து முடிவுகளை அவதானிக்கும் எவருக்கும் இப்போது பேரவையின் இயங்கு நிலையை செயல்படுத்தும் நிர்வாகமும், அதற்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களும் எடுக்கும் முடிவுகள் கனடிய தமிழர் சமூகத்திற்கு பயனுள்ளதாக இல்லை – அல்லது சமூகத்தின் தேவைகளை பிரதிபலிப்பதாக இல்லை என்பது நன்கு தெரியும்.

இவற்றில் எல்லாம்  தமிழர் சமூகத்திற்கு பயன் இல்லாத – அல்லது சமூகத்தின் தேவைகளை பிரதிபலிக்காத முடிவுகளை எடுத்த இன்றைய பேரவையின் நிர்வாகம் – அந்த நிர்வாகத்தின் இயலாமையை கேள்வி கேட்க முடியாத இன்றைய உறுப்பினர்கள்  எவ்வாறு கனேடிய தமிழ் சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை புரிந்து கொள்வார்கள்?

CTC தன்னை இன்னமும் கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக அடையாளம் காட்டுகிறது – அனால் அதன் நகர்வுகள் எவையும் அதை பிரதிபலிப்பதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஏற்கனவே இந்தப்  பத்தியாளர் குறிப்பிட்டது போல இவை அனைத்தும் தெரு விழாவை காக்க அவர்கள் எடுக்கும் – அல்லது எடுப்பதாக காட்டிக் கோளும் சிறு சிறு நகர்வுகள் மாத்திரம்தான்.

தம்மை சீர்திருத்துவதாக பொது வெளியில் அறிவித்துக் கொண்டு – தெருவிழாவுக்கு ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் என்ன பலன்? இந்தத் திட்டத்தில் “இலங்கையின் இளம் குயிலை” களம் இறக்குவதும் ஒன்றாம் என ஒரு ஊர்குருவி அண்மையில் காதோடு சொல்லியது.

கனடிய தமிழர்களின் கூட்டுக் குரலாக கனடியத் தமிழர் கூட்டு, பேரவையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு பதில் வழங்குவதற்கு ஒரு காலக்கெடுவையும் வழங்கியுள்ளது. இந்த விடயத்தில் பேரவை கூட்டுடன் உரையாடல்களை முன்னெடுக்கிறது. அண்மையில் பேரவை வெளியிட்ட அறிக்கைகளிலும், எடுத்த முடிவுகளின் பின்னணியிலும் கனடிய தமிழர்களின் கூட்டு அழுத்தமாக மாறும் கூட்டின் நெருக்கு நிலை தெளிவாகிறது.

கனடிய தமிழர் கூட்டுக் குரல்

அதை வெளிக்காட்ட முடியாத – அல்லது வெளிக்காட்ட விரும்பாத மனநிலையை பேரவையின் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் கொண்டுள்ளனர். அதனால் தான் தமது உறுப்பினர்களுக்கு மாத்திரம் நடத்த முயலும் “வியூக அமர்வை” கூட பொது வெளியில் அறிவிக்க வேண்டிய நிலையில் பேரவை உள்ளது.

ஆனாலும் தமது நிலை மாற்றத்திற்கு கனடியத் தமிழர் கூட்டின் ஆலோசனை அல்லது வழிநடத்தல் அல்லது காலக்கெடு ஆகியனவும் காரணிகள் என கூறவும் ஏற்றுக் கொள்ளவும் பேரவையால் முடியவில்லை – அல்லது அவர்களின் EGO இடம் கொடுக்க மறுக்கிறது.

இருந்தும் என்ன, கூட்டு பேரவையிடம் சந்திப்பொன்றிக்கு கோரியுள்ளதாம். இந்த சந்திப்பில் பேரவையின் நிர்வாகம், ஆலோசனை சபை, நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர்  பங்கேற்க வேண்டும் என்பது கூட்டின் கோரிக்கையாம்.

அவர்களின் EGO இடம் கொடுக்க மறுக்கிறது!

பார்க்கலாம் CTC உண்மையில் “கனேடிய தமிழ் சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை நன்கு புரிந்து கொள்ள” தயாராக உள்ளதா அல்லது “காக்க காக்க “தெருவிழாவை” காக்க!” எடுக்கும் மற்றொரு நகர்வு தான் இதுவா?

இவை அனைத்திலும் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் உள்ளது – February முதல் வாரத்தின் பின்னர் CTC (கேள்வி கேட்கும்) எந்த ஒரு ஊடகத்தையும் பொது வெளியில் சந்தித்து தமது நிலைபாடுகள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான காரணிகள் என்ற விடயங்கள் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு முன்னர் பலமுறை ஊதிய சங்கை மீண்டும் ஊதுகிறேன்:

தவறின் உச்சக் கட்டம்!

கனடிய தமிழர் பேரவையின் நடைமுறை நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும். தவறிழைத்தவர்கள் தொடர்ந்து முடிவெடுக்கும் நிலையில் இருந்து கொண்டு தவறை திருத்த முடியாது – கூடாது!

கனடிய தமிழர் பேரவை நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்

“Tamil Fest” வழமைபோல் தமிழர்களின் பெருவிழாவாக நடைபெற வேண்டும் என்பது இந்த பத்தியாளரின் உறுதியான நிலைப்பாடு. அதை CTC தான் நடத்த வேண்டும். ஆனாலும் தற்போது உள்ள தலைமை இந்த தெரு விழாவை நடத்துவது மீண்டும் கனடிய தமிழர்களை நடுத் தெருவில் நிற்க வைக்கும் ஒரு நகர்வாக தான் இருக்கும்.

நடைமுறை கனடிய தமிழர் பேரவை நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டை பொது வெளியில் இந்த பத்தியாளர் கடந்த December முதல் பகிர்ந்து வந்துள்ளார். அந்த நிலைப்பாட்டில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை.

கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம், நிர்வாக இயக்குனர் உட்பட தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைவரும் பதவி விலகி, இவர்கள் அனைவரும் கனடிய தமிழர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக விலத்தி இருப்பதே சமூகத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்க முடியும்.

உண்மையான சமூக பொறுப்புள்ள, வெளிப்படைத்தன்மையை பேணக்கூடியவர்கள் கனடிய தமிழர் பேரவையை பெறுபேற்று முன் நகர வேண்டும். கனடிய தமிழர் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இதற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும். கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய தமிழர்களின் அமைப்பு. அது கனடிய தமிழர்களின் முழுமையான நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக இருப்பது அவசியம்.

தமிழர் தெருவிழாவின் வரவு செலவு பொது வெளியில் பகிரப்படவேண்டும்

இம்முறை Tamil Fest ஒரு “சமூகக் குழு” (Working Committee) தலைமையில் கனடிய தமிழர் விழாவாக நடைபெற வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. இன்றைய நிர்வாகம் தெருவிழாவை நடத்துவது கனடிய தமிழ் சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரும் பாதகம்!

அதேவேளை இம்முறை தமிழர் தெருவிழாவின் வரவு செலவு பொது வெளியில் பகிரப்படவேண்டும். கனடிய தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பிற்கு இது ஒன்றும் சவாலான விடயமாக இருக்க முடியாது – கூடாது.

Tamil Fest 2024 மூலம் ஈட்டும் இலாபம் புதிதாக அமையும் தமிழ் சமூக மைய கட்டுமானத்திற்கான நன்கொடையாக இருந்தால் CTC மீண்டும் சமூகத்தின் அமைப்பாக மாற எத்தனிக்கிறது என்பதை பறைசாற்றும்!

இன்னும் வளரும்!

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

COVID தொற்றும் பல்கலாச்சார ஊடகங்களும்

Gaya Raja

கனடாவின் அதிக செலவு செய்யப்படும் தேர்தல்!

Gaya Raja

அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமான $123 ஆயிரம் நட்ட ஈடு தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment