தேசியம்
கட்டுரைகள் விஜயகுமாரன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக …

கனடாவின் தமிழ் மரபு மாதத்தின் ஒரு அங்கமாக Torontoவில் நிகழ்ந்த தமிழியல் விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சிறீனிவாசன் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். தமிழின் பெயரால் நடை பெற்ற நிகழ்வு ஒன்றிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும்(அல்லது வானதி சிறீனி வாசனுக்கும்) என்ன தொடர்பு என்பதைத் தாண்டி இந்த விடயத்தில் முன்னெழும் கேள்விகள் பல. தமது முதன்மை விருந்தினர் யார் – அவரது பின்னணி என்ன போன்ற அடிப்படை கேள்விகள் குறித்து இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கவலையோ அக்கறையோ கொண்டதாக தெரியவில்லை.

பாரதிய ஜனதா கட்சி, இந்திய அரசியலில் வலது சாரிக் கொள்கையுடைய கட்சிகளில் ஒன்று. பரவலாக இந்து தேசிய வாதக் கட்சி என்று கூறப்படும் கட்சி இது. அதன் கொள்கை சிறுபான்மை மதங்கள் மற்றும் தமிழ் இன மக்களுக்கு எதிரானது என்பதை தாண்டியும் ஜனநாயக விரோதமானது. இந்தியாவில் கடந்த December மாதம் சட்ட மூலமாக்கப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம்  – Citizenship (Amendment) Act (CAA) –  இதற்கான அண்மைய உதாரணம். இந்தியாவில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலும் இந்தச் சட்ட மூலத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.

மதச்சார் பின்மை என்னும் இந்தியாவின் அடித் தளத்தையே இந்தச் சட்டம் சிதைத்து விடும் என்பது பலரது கருத்தாகும். தவிரவும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் அகதிகள் இந்த குடியுரிமை சட்ட திருத்த பட்டியலில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தீவில் இன்னல்களையும், பாகுபாட்டையும், இனப் படு கொலையையும் சந்தித்த தமிழர்களை இந்த சட்ட மூலம் மீண்டும் பாகுபாட்டுடன் வஞ்சிக்கின்றது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாதங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில், பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது தங்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி இருக்கின்றது என இந்தியாவில் இன்றும் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கவலை தெரிவித்ததை சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் காட்டின. இவை அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது தற்போது இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 29 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய விரும்பாத கட்சி – தமிழகத்தில் இந்தித் திணிப்பை பல்வேறு வாகைகளிலும் முயற்சிக்கும் கட்சி – ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையில் இந்திய தேசிய காங்கிரசை விட கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி – தமிழர்களுக்கு தோழமைச் சக்திகளான சீமான், திரு முருகன் காந்தி, மணியரசன், தியாகு, கோவை இராமகிருஷ்ணன், குளத்தூர் மணி, ராஜேந்திரன் மற்றும் திராவிடர் கழக வீரமணி உட்பட அனைவரையும் அழித் தொழிக்க முற்படும் கட்சி என பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பட்டியல் மிக நீண்டது.

நிலைமை இவ்வாறிருக்க தமிழியல் விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு மதத்தின் அடிப்படையிலான ஒரு கட்சியின் உறுப்பினர் வானதி சிறீனிவாசன் என்பது பற்றி கவலையில்லை. தமிழ் மொழியை புறக் கணிக்கும் ஒரு கட்சியின் பிரதி நிதி அவர் என்பது பற்றியும் அக்கறை இல்லை. இந்தியா முழுமையையும் ஒடுக்கும், குறிப்பாக தமிழ் நாட்டை திட்டமிட்டு அழிக்கும் அரச இயந்திரத்தை நியாயப்படுத்துபவர் வானதி சிறீனிவாசன் என்பது பற்றியும் எள்ளளவும் யோசனை இல்லை.

வானதி சிறீனிவாசன் பிரதி நிதித்துவப் படுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் எதிர்ப்புக்கு ஒரு உதாரணம் இது: கீழடி ஆய்வுகளின் போது தமிழ் மொழியினதும், தமிழ் மக்களினது பண்பாடுகளினதும் வரலாறு கிறிஸ்த்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை என ஆதாரங்கள் வெளிவந்தன. தமிழ் சமூகத்தின் வாழ்வியலில் சாதி, வருணம், தீண்டாமை போன்ற கயமைத் தனங்களை பரப்பிய வகையினரின் எந்த விதமான அடையாளங்களும் கீழடியில் கிடைக்கவில்லை. இதனை அறிந்ததும் ஆய்வுகளை பாரதிய ஜனதா கட்சி அரசு நிறுத்த திட்டமிட்டது. இவ்வாறு தமிழ் மொழியினதும், தமிழ் பண்பாட்டினதும் தொன்மையை மீண்டும் மண்ணுக்குள் புதைக்க திட்டமிட்ட அரச இயந்திரத்தின் ஒரு பிரதி நிதி தான் வானதி சிறீனிவாசன்.

ஆனால் கனடாவில் தமிழியல் விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு இவை எல்லாம் ஒரு பொருட்டு இல்லை. வானதி சிறீனிவாசனை எந்த விதமான கூச்சங்களும், தயக்கங்களை இன்றி வர்க்க பாசத்துடன் அழைத்து மேடையமைத்து, அழகு பார்த்து, கொண்டாடி வழியனுப்பியுள்ளனர்.

கனடாவில் தமிழியல் விழாவை முன்னின்று நடத்தியது கனடியத் தமிழர் தேசிய அவை என்ற பொது அமைப்பு. நிகழ்வின் ஏற்பாட்டில் இணைந்து கொண்டவர்கள் கனடாத் தமிழ் கல்லூரி, அறிவகம் கனடா போன்ற தமிழ்ப் பாடசாலைகள்.

இந்த பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கும் (முன்னர் கற்பித்த) ஆசிரியர்களில் சிலர் வானதி சிறீனிவாசனை முதன்மை விருந்தினராக தமிழியல் விழாவிற்கு அழைத்ததை எதிர்த்திருக்கிறார்கள். வேறு சிலர் எதிர்கால கற்பிக்கும் சந்தர்ப்பத்தை கருத்தில் கொண்டு தமது எதிர்ப்பை தமக்குள் வைத்துக் கொண்டுள்ளனர். தவிரவும் நிகழ்வின் ஆதரவாளர்களான வணிகர்கள் சிலரும் கூட தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தனிமையில் மாத்திர மல்லாமல் பொது வெளியிலும் இந்த முடிவை விமர்சித்தவர்கள் பலர். தமிழ் மொழி எதிர்ப்பு என்பது இன்றைய தமிழகச் சூழலில் கொதி நிலையில் உள்ளது.

அது குறித்த எந்த வித அக்கறையும் இல்லாத இந்த நகர்வு ஆபத்தானது. கனடிய தமிழர்கள் மீது கறை பூசவல்லது. பொரும்பான்மையானவர்களின் கருத்தியலுக்கு எதிராக அல்லது அதனை மீறி ஒரு விடயம் செயற்படுத்தப்படுகின்றது என்பது ஓர் சர்வாதிகாரப் போக்கின் எடுத்துக் காட்டாகும். ஆனாலும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சிலர் இன்றும் தமது முடிவை பின் வருமாறு நியாயப்படுத்துகின்றனர்

“இந்தியாவை ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவரை அழைத்து அவர் ஊடாக இந்திய மத்திய அரசிடம் பேசி பல நன்மைகளை எமது மக்களுக்கு செய்யும் முதன்மை திட்டம் (master plan) இது” என அரசியல் நியாயம் கூறியுள்ளனர்

இவர்களின் நகர்வுகள் தொடர்ந்தும் கனடிய தமிழர்களை ஏமாற்றும் முயற்சியே. உலக வரலாற்றில் மிகப் பெரும் ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசை பணிய வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என இவர்கள் பகல் கனவு காண்கின்றனர்.  இலங்கை அரசினால் ஒடுக்கப்பட்டு இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என தமிழ் நாட்டின் பொது மக்களும், தமிழ் உணர்வாளர்களும், ஜனநாயக முற்போக்கு அமைப்புக்களும் போராடுகின்றனர்.

ஆனால் இங்கு…..

கனடிய தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ளதாக தம்மை பறை சாற்றுகின்ற பொது அமைப்புகள் மற்றும் எதிர் கால தமிழ் சிறார்களுக்கு கல்வி புகட்டுகின்ற பாடசாலைகளின் இது போன்றை தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைத் தான் பிழைப்புவாத துரோக அரசியல் என்பார்.

விஜயகுமாரன்

Related posts

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

கனடாவில் கட்டாய வாக்களிப்பு சாத்தியமா?

Gaya Raja

2021 கனேடிய தேர்தல்: சமூக ஊடகங்களின் ஆதிக்கம்!

Gaya Raja

Leave a Comment