தேசியம்
கட்டுரைகள்சிவமணி

தேசிய நாயகன் கருணா வின்சென்ற்

அவனுக்குள் ஒரு கரு செலுத்தப்பட்டுவிட்டால் கர்ப்பம் கொண்டு அதைக் கலைவடிவமாகக் கணினித் திரையில் பிரசவித்திடும் கருணாகரம் கொண்டவன். உலகத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்திய DIGI Media Creations என்னும் ஒற்றை மனித இயக்கம் கருணா. ஓவியன், புகைப்படப்பிடிப்பாளன், வரை கலைஞன், வடிவமைப்பாளன், எழுத்தாளன், அரங்க ஒருங்கமைப்பாளன், விமர்சகன் எனபல் துறைகளிலும் முழுமையான ஆளுமை கொண்டவன் கருணாவின் சென்ற்.

இவனோடு பயணப்படாத இரவுகளும் இல்லை. பகல்களும் இல்லை. துர திஷ்டம் இனி அப்படி ஒரு பொழுது வரப்போதும் இல்லை.

என் பெருமைக்குரிய நண்பன் கடந்த (2019) வருடம் February மாதம் 21ம் திகதி 7 மணிக்கு என்னுடன் தொலைபேசியில் பேசிவிட்டு மரணவாகனத்தில் ஏறிப் பறந்து விட்டான். அவன் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் “சனிக்கிழமை 11 மணிக்கு வாங்க மீதி வேலையைச் செய்து முடித்திடுவம்” என்பது தான். அதற்கு முதல் சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் தொடர்புடைய இரண்டு பணிகளை கருணாவுடன் ஆரம்பித்திருந்தேன்.

அது தான் கருணாவுடனான எனது இறுதிச் சந்திப்பு என்பதை ஏற்க இன்றும் மனம் மறுக்கின்றது. 22ம் திகதி காலை நான் பணியில் இருந்த போது நண்பன் ஆதவனின் செல்பேசி அழைப்பு கருணாவின் மரணச் செய்தியுடன் செவிகளில் செந்தணலாகப் பாய்ந்தது. நான் வேறு வேறு கருணாக்களையெல்லாம் ஆதவனிடம் வினாவுகிறேன். ஆதவனோ “இல்லை மச்சான் உன்ர தோஸ்த்து DIGI கருணா” என்ற போது அனைத்தும் இயக்க மற்றுப் போனது. என் சகோதரியின் இறப்புச் செய்திக்குப் பின் என்னை அதே அளவுக்குப் பாதித்த இழப்புச் செய்தி இது தான்.

2000ம் ஆண்டின் ஆரம்பப் பகுதி தமிழ் வானொலிப் பெட்டிகள் உன்னால் உருவாக்க முடியுமா என்ற கேள்வியுடன் என்னை அணுகினார் (கனடா ஐங்கரன் International) மதி அண்ணா. இது ஈழத் தமிழர்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு Brand ஆக வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பல மாத முயற்சியின் பின்னர் Mani National Corporation என்னும் பெயருடன் கருணாவை அவனது 10 Gateway Blvd அலுவலகத்தில் சந்தித்து விபரத்தை கூறினேன். “இந்த ஆங்கிலப் பெயரை எப்பிடி தமிழ்ப் படுத்துவாய்” என்றான். தமிழ்ப்படுத்தினால் “மணி தேசியக் கூட்டுத்தாபனம்” எனவரும் என்று கூறினேன். “நீங்களும் தேசியத்தை Brand ஆக்கிறது எண்டு தான் நிக்கிறீங்க” என்று சொல்லிவிட்டு “நல்ல பெயர் ஐயா” “LOGOவில அசத்தீடுவம்” என்றான்.

ஒரு வாரத்துக்கு மேல் மாலை, இரவு வேளைகளில் பணியாற்றி “மணி” LOGO செய்து முடிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் தான் எங்களின் Radio Cabinetக்களை 3D உருவங்களாகதர வேண்டும் என சீனத் தயாரிப்பாளர்கள் சொன்ன பொழுது எவ்வித முகச் சுளிப்புமில்லாமல் நான் ஒரு தாளில் எனது எண்ணங்களை வரைந்து கொடுக்க அதைச் சீராகவடிவமைத்து கொடுத்த ஒர் Genius கருணா.

இதே போல் எனது நண்பர் இலங்கதாஸ் 2004ம் ஆண்டு தான் ஒரு வாரப்பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் சேர்ந்து வேலை செய்கிறாயா எனக் கேட்டான். “Paper செய்த அனுபவம் இல்லையே” எனச் சொன்ன போது “CTBCயில் அனுபவம் இருந்தா எல்லாம் செய்தனாங்கள்” என்றான் இலங்கதாஸ்.  “சரி முதல்ல ஒரு பெயரைவையேன் பேந்து மிச்சத்தை யோசிப்பம்” என்றான். பல்வேறு விவாதங்களுக்கு பின்னர் “தேசியம்” என்ற பெயரை இலங்கதாஸ் ஏற்றுக் கொண்டான். இப்போது LOGO செய்ய வேணும். எனவே கருணாவிடம் போனோம்.

“தேசியம்” என்ற பேரைக் கேட்டவுடன் “ஐயா திருப்பவும் தேசியமா” என்றான் கருணா. அதற்கு நாங்கள் “தேசியத்தோட இரண்டறக் கலந்திருப்பவரிட்டைத் தானே தேசிய LOGO செய்ய வரலாம்” என்று சொன்னோம். சிரித்த படி “வந்தா வேலையைச் செய்து கொண்டு போங்கோ என்ர மடியில ஏனையா கைவைக்கிறீங்க” என சொல்லி விட்டு தேசியத்தின் LOGOவை செய்து கொடுத்தான். யார் Paper Layout செய்வது எனக் கருணா கேட்க; இலங்கதாஸ் அதுவும் கருணா தான் எனச் சொல்ல “அடப்பாவிகளா கேக்காமலே முடிவெடுப்பீங்களா” என்று விட்டு ஒரு விடயத்தைக் கூறினான். “நான் Color Add மற்றும் Color வேலைகளைச் செய்து தாறன் உங்களில் ஒரு ஆளுக்கு Layout செய்வதைக் காட்டித்தாறன்” எனச் சொன்னான்.

பத்திரிகை வடிவமைப்பு எவ்வாறு செய்வது என QuarkXPress என்ற படைப்பு நிபுணர்களுக்கான முன்னணி மென்பொருளில் எனக்கு காட்டித் தந்த பின்னர் ஜெயரஞ்சனி என்ற பெயரில் தேசியத்தின் ஆஸ்தான Layout Artist ஆக பணிகளை ஆரம்பித்தேன். ஒரு மாத முன் பணிகளுக்குப் பின் “தேசியம்” பிரசுரமாகியது. கருணாவைக் கௌரப்படுத்துவதாக எங்களுக்கு நாங்களே பெருமைப்பட்டு வரைகலை அறிவுரை DIGI Media Creations என்று ஆசிரியர் தலையங்கப் பக்கத்தில் அச்சிட்டோம்.

தேசியத்தில இருந்த நேர்த்தி, வடிவமைப்பு, பாவிக்கப்பட்ட எழுத்துருக்கள், நிறத் தேர்வு, விளம்பர அழகு என பல அம்சங்கள் கனேடிய தமிழ்ப் பத்திரிகை உலகில் ஓர் தரமாற்றத்தை உருவாக்கியது. கனேடிய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அருகேவைக்கக் கூடிய அந்தஸ்தைப் பெற்றது. கருணவே “சேரன் பாரட்டினார், என்னிடம் மற்றைய பத்திரிகையாளர்கள் வந்து மாற்றங்கள் கேட்கிறார்கள்” என்றெல்லாம் சொல்லி மகிழ்ந்து புதுப்புது மெரு கூட்டல்களை சொல்லித் தந்தான்.

நாங்கள் தேசியத்தில் Busy ஆக இருந்த காலப் பகுதியில் கருணாவும் தமிழ்த் தேசியத்துடன் நெருக்கமாக பயணித்துக் கொண்டிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துக்குத் தேவையான வேலைகளைச் செய்து வந்தான். மறு புறம் எங்களுடனான அரட்டையும் குறையவில்லை. ஒரு நாள் கருணாவுடன் இருந்த பொழுது ஓர் கிறீஸ்தவ பத்திரிகையை Printing Pressக்கு அனுப்பி விட்டு விடுதலைப் பத்திரிகை ஒன்றில் பணியாற்ற ஆரம்பித்தான். அப்பொழுது கேட்டேன் “எப்பிடிக் கருணா இரண்டு Directionஇலும் வேலை செய்கிறீர்கள்” எண்டு. “Very Simple Boss இரண்டுமே விடுதலையைப் பற்றி பேசுகின்ற பத்திரிகைகள் தான்” எனச் சொல்லிச் சிரித்ததை இன்றும் மறக்க முடியாது.

கருணா தமிழ்த் தேசியம் சார்ந்து ஆற்றிய பணி அளப்பரியது. யாருடன் பணியாற்றினாலும் அவனது வடிவமைப்பில் சர்வதேசத் தரம் இருக்கும். தமிழ், தமிழ் வடிவமைப்பை உலகத்தரத்தில் உயர்த்திக் காட்டியவர்களில் கருணா பிரதானமானவன். இதனால் கருணாவை ஓர் தேசிய நாயகன் என்றே பார்க்கிறேன்.

கருணாவைச் சுற்றி இலக்கியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் என பல் கலைக் கலைஞர்கள் வட்டம் இருக்கும். இவ் வகை அடையாளம் எதுவும் இல்லாத என்னுடனும் கருணாவால் நட்புப் பாராட்ட முடிந்திருக்கின்றது என்பது தான் அவனது மிகப் பெரிய பலம்.

எங்கள் குடும்ப நண்பனின் இழப்பு நிட்சயம் நிரப்பப்பட முடியாத வெற்றிடமே.

சிவமணி

Related posts

முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள்: செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்கள்!

Gaya Raja

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Gaya Raja

Oscar வென்ற கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment