சர்ச்சைக்குரிய வேட்பாளரை பதவி நீக்கம் செய்யப் போவதில்லை என Liberal கட்சி தலைவர் Mark Carney தெரிவித்தார்.
Markham-Unionville தொகுதியில் Liberal கட்சி வேட்பாளராக Paul Chiang தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிப்பதாக Mark Carney திங்கட்கிழமை (31) கூறினார்.
Conservative கட்சி வேட்பாளர் Joe Tay, Toronto-வில் உள்ள சீன தூதரகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அண்மையில் Paul Chiang பரிந்துரைத்திருந்தார்.
January மாதம், சீன மொழி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் Markham-Unionville தொகுதியில் Paul Chiang, போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
Paul Chiang-கை Liberal கட்சி வேட்பாளர் நிலையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என Conservative கட்சி வெளியிட்ட ஒரு அறிக்கையை வலியுறுத்தியது.
நாடாளாவிய ரீதியில் உள்ள Hong Hong-கனடியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 குழுக்கள் Paul Chiang-கின் நடவடிக்கைகளை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டன.
இந்த விடயம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது Mark Carney, ஊடகங்களிடமிருந்து தொடர்ச்சியான கேள்விகளை எதிர்கொண்டார்.
இந்த கருத்துக்கள் அவதூறானவை என Mark Carney வகைப்படுத்தினார்.
ஆனால் தனது கருத்துக்களுக்கு Paul Chiang மன்னிப்பு கோரியுள்ளதை சுட்டிக்காட்டிய Mark Carney, தனது கருத்துக்களுக்காக Joe Tay-யிடம் அவர் நேரடியாக மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Paul Chiang, இந்த சமூகத்தில் உரிமைகளைப் பாதுகாக்க 28 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு மூத்த காவல்துறை அதிகாரி என குறிப்பிட்ட Mark Carney, அவர் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பார் எனவும் சுட்டிக்காட்டினார்.
“அவரது கருத்துக்கள் என்னை மிரட்டும் நோக்கில் உள்ளன” என இந்த விடயம் குறித்து Joe Tay தெரிவித்தார்.
Paul Chiang-கை, Mark Carney வேட்பாளர் நிலையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
Joe Tay தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களுக்கு Hong Kong காவல்துறை கடந்த ஆண்டு 1 மில்லியன் Hong Kong டாலர் வெகுமதி அறிவித்தது.
December மாதம் 2024 ஆம் ஆண்டில் முதன் முதலில் வெளியான இந்த வெகுமதி அறிவித்தல் குறித்து கனடாவில் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்தனர்.
ஜனநாயக ஆர்வலரான Joe Tay, Hong Kong-கின் உரிமை மீறல்களை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.
Don Valley வடக்கு தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.