கனடிய பிரதமர் Mark Carney-யுடன் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தொலைபேசி அழைப்புக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படாத வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்க நடவடிக்கை எடுத்த பின்னர் அமெரிக்க அதிபர் இந்த சந்திப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க-கனடா வர்த்தகத்தில் Donald Trumpபின் தீவிரப்பாடு கனடாவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இடை நிறுத்திய பிரதமரும் Liberal தலைவருமான Mark Carney தனது அமைச்சரவையுடன் வியாழக்கிழமை (27) ஒரு சந்திப்பை Ottawa-வில் முன்னெடுத்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா ஜனாதிபதி ஒரு தொலைபேசி அழைப்புக்கு புதன்கிழமை (26) கோரியதாக தெரிவித்தார்.
ஆனாலும் இரு நாட்டின் தலைவர்களுக்கும் இடையில் இதுவரை இந்த தொலைபேசி உரையாடல் நிகழவில்லை என் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
Mark Carney இந்த உரையாடலுக்கு தயாராகும் முகமாக வெள்ளிக்கிழமை (28) தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார் என தெரியவருகிறது.
அதேவேளை வரி கட்டணங்கள் குறித்த அமைச்சர்கள் சந்திப்பின் பின்னர் Montreal நகரில் Mark Carney பிரச்சார பேரணி ஒன்றில் பங்கேற்றார்.
அங்கு உரையாற்றிய அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வாகன வரி கட்டணத்தை கனடா மீதான “நியாயமற்ற, அர்த்தமற்ற” தாக்குதல் என் விமர்சித்தார்.
“அமெரிக்காவுக்கு அதிகபட்ச தாக்கத்தையும், கனடாவில் குறைந்தபட்ச தாக்கத்தையும் ஏற்படுத்தும் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுடன் அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்த்து நாங்கள் போராடுவோம்,” என தனது உரையில் Mark Carney உறுதியளித்தார்.