கனடிய பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.
இதற்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிடுவார் என எதிர்வு கூறப்படுகிறது.
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி அல்லது May 5-ஆம் திகதி நடைபெறும் என தெரியவருகிறது.
தேர்தல் திகதி குறித்து இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அது விரைவில் எடுக்கப்படும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Liberal தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் Mark Carney, March 14-ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார்.
முன்னாள் பிரதமர் Justin Trudeauவின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (24) மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், Mark Carney ஒரு சிம்மாசன உரையை வெளியிட வேண்டியதில்லை .
அதேவேளை Liberal அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.