கனடாவின் புதிய பிரதமர் Mark Carney-யை மன்னர் சார்லஸ் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கனடாவின் 24-வது பிரதமராக வெள்ளிக்கிழமை (14) பதவியேற்ற Mark Carney, தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்தார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இங்கிலாந்து பயணமாகிறார்.
இந்தப் பயணத்தில் Mark Carney-யை மன்னர் சார்லஸ் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு கனடாவுக்கான இங்கிலாந்தின் ஆதரவின் சமிக்ஞையாக நோக்கப்படுகிறது.
அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump-புடன் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில் கனடாவுக்கு இங்கிலாந்தின் அசைக்க முடியாத ஆதரவின் அறிகுறி இது என தெரிவிக்கப்படுகிறது.
புதிய கனடிய பிரதமர் இங்கிலாந்திற்கு விஜயம் செய்யும் போது அவரை சந்திப்பதற்கு மன்னரிடம் ஒரு தீர்க்கமான உறுதிப்பாடு உள்ளதாக அரண்மனைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து மன்னர் கவலை கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் செய்தி ஊடகங்கள் கடந்த வார இறுதியில் தெரிவித்தன.
மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றும் தனது எண்ணத்தை Donald Trump பலமுறை முன்மொழிந்தார்.
மன்னர் சார்லஸ் நாட்டின் தலைவராக உள்ள கனடாவின் மீது கடுமையான வரிகளையும் அவர் விதித்து வருகிறார்.
வெள்ளியன்று புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், இங்கிலாந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-ம்பை சந்திக்கும் திட்டங்கள் எதுவும் உடனடியாக இல்லை என தெரிவித்தார்.
கனடாவின் புதிய தலைவர் அமெரிக்க தலைவரையும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கனடிய தலைவரையும் சந்திப்பது வழமையாகும்.
மாறாக “கனடிய இறையாண்மைக்கு தகுந்த மரியாதை” செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு Mark Carney பதவியேற்ற பின்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் மத்திய வங்கியில் Mark Carney ஏழு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், மன்னர் சார்லசுடன் நெருக்கமான உறவை உருவாக்கியிருந்தார்.