கனடிய பிரதமர் Justin Trudeau மன்னர் Charles ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்றார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனில் அமைதிக்கான பாதையை திட்டமிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau இங்கிலாந்து பயணமானார்.
இந்த நிலையில் பிரதமர் மன்னரை திங்கட்கிழமை (03) சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க Buckingham Palace மறுத்து வரும் நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
இந்த சந்திப்பில் குறிப்பிடட விவகாரம் முன்னுரிமை விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற வேண்டும் என சமீபத்திய மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கருத்து தெரிவித்து வருகிறார்.
கனடா இந்த இணைப்புக்கு ஒப்புக்கொண்டால், அமெரிக்காவினால் அச்சுறுத்தப்படும் கடுமையான வரி கட்டணங்களை தவிர்க்க முடியும் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் கூறினார்.
இந்த விடயத்தில் தனது விருப்பத்தை நிறைவு செய்ய “பொருளாதார சக்தியை” பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் Donald Trump கூறினார்.
இந்த அழைப்பை கனடாவின் மத்திய, மாகாண தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
Westminster சட்டத்தின்படி, மன்னர் Charles கனடாவின் தலைவராக இருக்கும்போதும், பிரதமரின் ஆலோசனையின் படியே மன்னர் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.