தேசியம்
கட்டுரைகள் நடராஜா முரளிதரன்

கனடா: சிறுபான்மை அரசின் சவால்கள்!

கனடிய ஆளும் Liberal அரசாங்கம் தமது சிறுபான்மை அரசாங்கத்தை நகர்த்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். பிரதமர் Justin Trudeauவும் அவரது சகாக்களும் எதையும் செய்யத் துரிதப்படுவதாகத் தெரியவில்லை. புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால் தேர்தல் பிரச்சாரத்தின் போது  உறுதிமொழி அளித்த எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை வகுக்க Liberal அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.

தாக்குதல் பாணித் துப்பாக்கிகள் உட்பட கைத்துப்பாக்கிகளைத் தடைசெய்யப் புதிய நடவடிக்கைகளை எடுப்பது சிக்கலானது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறுகிறார்.

வெளிப்படையாக, சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei கனடாவின் 5G அலைபேசி வலைப்பின்னலில் பங்கேற்க அனுமதிக்கலாமா என்ற இன்னொரு கேள்விக்கு இன்றைய அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது.

மருந்துப் பராமரிப்புத் திட்டத்தின் (Pharma Care) எதிர்காலம் என்ன??

வரிகளை குறைக்க உள்ளார்களா?

கைத்தொலைபேசிப் பாவனை அறவிடலைக் குறைப்பார்களா?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரியமிலவாயு போன்ற மாசு வாயுக்களை மற்றும் மாசுத் துணிக்கைகளைக் குறைக்க புதிய நடவடிக்கைகள் ஏதும் உண்டா?

அனைத்துக்கும், காத்திருங்கள் என Liberal அரசாங்கம் சொல்கிறது. வரவு செலவுத் திட்ட அறிக்கை கூட March மாத இறுதியில் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இப்பொழுது அரசு செயற்படுபவைகளுக்குப் பின்னால் உள்ள சில விடயங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாலான நிகழ்வுகளின் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். கடந்த சில வாரங்களாக அதன் கவனம் Ukraine பயணிகள் விமானம் Tehranனில் சுட்டு வீழ்த்தப்பட்டுப் பல கனடியர்கள் இறந்ததற்கு Iranனைப் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் முதன்மையாக இருந்தது. இப்பொழுது சீனாவில் தோன்றி கனடாவை வந்தடைந்திருக்கும் Corona Virus விவகாரம் தாண்டவம் எடுத்தாடுகிறது.

Quebec உச்ச நீதிமன்றம் கடந்த இலையுதிர்காலத்தில், வயது முதிர்ந்த தீராத நோயாளிகள் மருத்துவ உதவியுடன் இறப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஒரு பகுதியை இல்லாமல் ஆக்க முடிவு செய்தது. அதற்குப் பொது ஆலோசனைகள் இப்பொழுது தேவைப்படுகின்றன. அந்த ஆலோசனைகள் நீதிமன்றத்தின் March மாதம் 11ஆம் திகதி காலக்கெடுவுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படுவது அவசியம். முதிர்ச்சி அடைந்த இளையவர்களுக்கும் இச்சட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமா என்ற மிக முக்கியமான கேள்விக்கும் நீதிமன்றம் பதிலளிக்க வேண்டியுள்ளது. Alzheimer போன்ற சீரழிவு நோய்களின் பிடியில் சிக்கிக் கொள்வதற்கு முன்னர், கனடியர்கள் இறப்பதில் மருத்துவ உதவிக்கு முன்கூட்டியே  கோரிக்கை வைக்க அனுமதிக்க வேண்டுமா என்பதையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமைவாக Huawei நிர்வாகி Meng Wanzhou கைது செய்யப்பட்டதிலிருந்து, கனடியர்களான Michael Spavor மற்றும் Michael Kovrig ஆகியோரை சீன அரசு கைது செய்ததைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவுடனான இராஜதந்திர உறவைத் தொடர்வதற்கு கனடிய அரசுக்கு மிகுந்த அவதானமும், எச்சரிக்கையும் தேவைப்படுகிறது. கனடாவில் மத்திய மற்றும் மாகாண அதிகாரிகள் புதிய Corona Virus குறித்து மிகுந்த விழிப்போடு செயற்பட்டாலும் இதன் விளைவுகள் கனடியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. யாரும் எதிர்பாராத வகையில் தோன்றியுள்ள இந்தச் சவாலையும் கனடிய அரசு சமாளித்துக் கரை சேர வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் கடமை என்பது முன்னுரிமைகளைக் கட்டமைப்பதும் மற்றும் உறுதியளித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதும் ஆகும். ஆனால் பிரதமர் Trudeau இப்பொழுது ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்துகிறார். அது நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்பு உடையதாக இருக்க முடியாது. குறைந்த ஆயுள் கொண்டதாகவும் அமையலாம். எனவே சிறுபான்மை அரசுக்கு விரைவாகவும், காத்திரமாகவும் செயற்பட வேண்டிய பொறுப்புள்ளது. அவ்வாறானால்தான் அடுத்த தேர்தலை அவர்கள் உறுதியோடு சந்திக்க முடியும். அல்லாத பட்சத்தில் விளைவுகள் விபரீதமாக முடிவடைந்து விடும்.

அரசு என்ன செய்ய உள்ளது என்றால் சிம்மாசனப் பிரசங்கத்தைப் படியுங்கள் என்கிறார் Pablo Rodrîguez. இவர் தான் Liberal அரசின் சபைத் தலைவர். Rodrîguez, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் மாறவில்லை. முதலில் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், பின்னர் துப்பாக்கிக் கட்டுப்பாடு மற்றும் மருத்துவ உதவியுடன் கடும் நோயாளிகள் இறப்பது குறித்த சட்ட மசோதாக்கள் என்கிறார்.

புதிய அரசாங்கத்தின் சிம்மாசன உரை, அதற்கான தகவல்களை வழங்குகிறது. அது நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சியை முன்மொழிகிறது. பழங்குடி மக்களுடன் “நல்லிணக்கத்துடன் கூடிய பாதையில் பயணிப்பது” மற்றும் நிச்சயமற்ற உலகில் கனடாவின் வெற்றியை நிலை நிறுத்துவது பற்றிச் சொல்லுகிறது.

எதிர்க்கட்சிகள் கிடைக்கும் வெற்றிடங்களை நிரப்ப அந்தரப்படுகின்றன. எதிர்வரும் June மாதம் Conservative கட்சியினர் தங்களது புதிய தலைமையைத் தேர்வு செய்ய உள்ளார்கள். Liberal அரசாங்கத்துடன்  அவர்கள் நிகழ்த்தும் சண்டை, குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழியைத் தேர்வதும் மற்றும் துப்பாக்கிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல் குறித்ததும் ஆகும்.

சட்டவிரோத துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கடத்தப்பட்ட துப்பாக்கிகளின் பரவலைத் தடுப்பது மிகவும் சிக்கலானது. மேலும் சட்டவிரோதக் கும்பல்களுக்குள் ஊடுருவி அவர்களைப் பொறுப்பேற்க வைப்பது மிகவும் கடினம் என்று வெளிச்செல்லும் Conservative கட்சித் தலைவர் Andrew Scheer நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் கூறினார். ஆனால் Conservative கட்சியினர் செய்யத் தயாராக இருக்கும் வேலை அது.

Liberal அரசாங்கம் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளின் விரிவாக்கப்பட்ட பட்டியலை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளனர். துப்பாக்கி மற்றும் கும்பல் வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்காக தனது அரசாங்கம் 327 million dollarகளுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், நகரங்கள் கைத்துப்பாக்கிகளைத் தடைசெய்ய அனுமதிக்க வேண்டும் என்ற திட்டங்கள் குறித்து நகர முதல்வர்களுடன் தொடர்ந்து ஆலோசிப்பதாகவும் பிரதமர் Trudeau கூறுகிறார். ஆனால் அவரும் அமைச்சர் Blairரும் அதற்கான ஒரு கால அட்டவணையை வழங்கத் தயங்குகிறார்கள்.

எமக்கு 5G வலைப்பின்னலை Huawei வரையறுக்கப்பட்ட வகையில் வழங்குவதற்கு இங்கிலாந்தின் நிலைப்பாட்டைக் கனடா பின்பற்றுமா என கேட்டபோது “பாதுகாப்பு பிரச்சினைகள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கூடுதல் கவலைகள் உள்ளன” என்று அரச தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. “எங்கள் நட்பு நாடுகளுடனும், தொழில் துறையாளர்களோடும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. கனடியர்களுக்கு எது  சரியானது என்ற முடிவை நாங்கள் எடுப்போம். அதைச் செய்ய தேவையான நேரத்தை நாங்கள் எடுப்போம்.” என்றும் சொல்லப்பட்டது.

புதிய ஆண்டில் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், NDP தலைவர் Jagmeet Singh, பிரதமர் Trudeauவை நோக்கி மருந்து  பராமரிப்புத் திட்ட (Pharma Care) மசோதாவை அறிமுகப்படுத்த அழைப்பு விடுத்தார். Million கணக்கான கனடியர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்க முடியாது தவிக்கையில் Liberal அரசாங்கம் அவர்களைக் காத்திருக்கச் சொல்கிறார்கள் என்பது அவரது விவாதம். நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. இந்த நாடாளுமன்றத்தில் எங்களது முதல் மசோதா கனடா சுகாதாரச் சட்டக் கொள்கைகளின் அடிப்படையில் கனடியர்கள் அனைவருக்குமான சிறந்த மருந்துப் பராமரிப்புத் திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவித்திருந்ததை NDP தலைவர் Singh ஞாபக மூட்டுகிறார்.

பிரதமர் Trudeau தனது பதிலில் போதைப் பொருள் விலையைக் குறைப்பதற்கான தனது முதல் ஆணையில் தனது அரசாங்கம் செய்ததைப் பட்டியலிட்டு, மருந்து வழங்கலுக்கான சிறந்த அணுகுமுறையை பரிந்துரைக்க முன்னாள் Ontario மாகாண சுகாதார அமைச்சர் Eric Hoskins அரசாங்கத்தால்  நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். Hoskins அறிக்கையில் காணப்படும் கொள்கைகளின் அடிப்படையில் மருந்து பராமரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் நாங்கள் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் எனவும் பிரதமர் Trudeau கூறுகின்றார்.இந்த அறிக்கை 2027க்குள் ஒரு தேசிய மருந்துப் பராமரிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என கூறியது.

Trudeau அரசாங்கம் நகரும் வேகத்தில், இந்தச் சவாலைச் சமாளிக்க இன்னும் கால அவகாசம் அவர்களுக்கு இருப்பதால் தப்பிவிடுவார்கள்!

நடராஜா முரளிதரன்

Related posts

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

சவாலான காலத்தை எதிர்கொள்ளும் Andrea Horwath

Gaya Raja

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

Lankathas Pathmanathan

Leave a Comment