இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லியில் உள்ள கனடிய உயர்ஸ்தானிகராலய பகுதியில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
Brampton நகரில் இந்து ஆலயத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மோதல் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த போராட்டம் வார விடுமுறையில் நடைபெற்றது.
இந்த போராட்டம் காரணமாக கனடிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து சீக்கிய உலக மன்றத்தின் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்து, சீக்கிய சமூகங்களின் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு ஒரு அணிவகுப்பையும் ஏற்பாடு செய்தது.
Brampton இந்து ஆலயத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கனடிய உயர்ஸ்தானிகராலயம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறையினர், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.