Markham நகரில் சுட்டுக் கொல்லப்பட்டவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர் 44 வயதான பார்த்தீபன் பஞ்சலிங்கம் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
McCowan Road – 14th Avenue சந்திப்புக்கு அருகாமையில் அவரது இல்ல வாசலில் வைத்து இவர் சனிக்கிழமை (19) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இவர், சம்பவ இடத்தில் மரணமடைந்ததாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் ஏற்கனவே காவல்துறையினருக்கு தெரிந்தவர் என விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
அவர் தனது மனைவி, மூன்று சகோதரிகளுடன் இந்த இல்லத்தில் வசித்து வந்தார் என அயலவர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் குறித்த காரணம் எதையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.
இதில் புலனாய்வாளர்கள் குறைந்தது ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர்.
ஆனாலும் இதில் தொடர்புடைய சந்தேக நபர்களின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்த விபரம் அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரினர்.
இவரது கொலை Toronto பெரும்பாகத்தில் அண்மையில் tow truck தொழில் துறையில் அதிகரித்து வரும் வன்முறையின் எதிரொலியாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இவரது பெயரில் ஒரு நபர் 2018 இல் Toronto நகரில் tow truck ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.