February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடா- இந்தியா இருதரப்பு உறவை Justin Trudeau சிதைத்து விட்டார்: இந்திய உயர் ஸ்தானிகர் குற்றச் சாட்டு

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை Justin Trudeau சிதைத்து விட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

கனடிய செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார்.

கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP அண்மையில் குற்றம் சாட்டியது.

கனடிய சீக்கியத் தலைவர் Hardeep Singh Nijjar, கடந்த ஆண்டு British Colombia வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது கொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு “நம்பகமான சான்றுகள் ” இருப்பதாக பிரதமர் Justin Trudeau ஒரு வருடத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அன்று முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ‘அவநம்பிக்கை’ நீடிக்கிறது எனவும் சஞ்சய் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவு பாதுகாக்கப்படும் அதே வேளையில், அரசியலில் “நம்பிக்கையின்மை” உள்ளதாக அவர் கூறினார்.

பிரதமர் Justin Trudeau தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்தியாவுக்கு அவநம்பிக்கை உள்ளதாகவும் தனது செவ்வியில் சஞ்சய் குமார் வர்மா குறிப்பிட்டார்.

கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hardeep Singh Nijjar கொலை குறித்த குற்றச்சாட்டின் எதிரொலியாக சஞ்சய் குமார் வர்மா  உட்பட ஆறு தூதர்களை கடந்த வாரம் கனடா வெளியேற்றியது.

அவரையும் வெளியேற்றப்பட்ட அவரது சகாக்களையும் மாற்றலாமா வேண்டாமா என்பது குறித்து இந்தியா எடுக்கும் எந்த முடிவும் இரு அரசாங்கங்களுக்கு இடையே ஒரு “விவாதத்தை” ஏற்படுத்தும் எனவும் சஞ்சய் குமார் வர்மா கூறினார்.

கனடாவின் குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இந்தியா வகைப்படுத்துகிறது.

கனடாவின் நகர்வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் குறைவாக தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

இந்த ஆண்டு Ontario 186.1 பில்லியன் டொலரை செலவிடும் – வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் தகவல்!

Gaya Raja

988 என்னும் தற்கொலை உதவி எண் கனடா முழுவது அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment