கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதாக பிரதமர் Justin Trudeau மீண்டும் குற்றம் சாட்டினார்.
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த ஆணையத்தில் Justin Trudeau புதன்கிழமை (16) சாட்சியமளித்தார்.
கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என பிரதமர் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார்.
கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP அண்மையில் குற்றம் சாட்டியது.
சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையில் மூத்த இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தபோது, தன்னிடம் உளவுத்துறை தகவல்கள் மாத்திரமே இருந்த்தாக பிரதர் குறிப்பிட்டார்.
கனடியர் ஒருவரின் கொலையில் மூத்த இந்திய இராஜதந்திரிகள் தொடர்புடைய நபர்கள் என்ற தகவல் வெளியான நிலையில் இந்தியா-கனடா உறவுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக கனடிய அரசு அறிவித்தது.
கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் Hardeep Singh Nijjar கொலையில் இவர்கள் ஆறு பேரும் தொடர்புடைய நபர்கள் என RCMP அடையாளம் கண்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆறு கனடிய தூதர்களை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்தது.
கனடாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்தியா கடுமையாக மறுத்துள்ளது.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.