December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?

சீக்கிய கனடியர் கொலை குறித்த விசாரணையில் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தொடர்புடைய நபராக அடையாளம் காணப்பட்டவர் என தெரியவருகிறது.

கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டார்.

இந்த கொலை விசாரணையில் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா தொடர்புடைய நபராக – person of interest – அடையாளம் காணப்பட்டார் என RCMP தரப்பின் மூலம் தெரியவருகிறது.

கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக கனடிய அரசு அறிவித்துள்ளது  .

இவர்களில் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மாவும் ஒருவராவார்.

கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளின் இராஜதந்திர நிலையை இந்தியா நீக்க வேண்டும் என கனடா கோரியிருந்தது.

இதன் மூலம் இந்த அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் சாத்தியக்கூறுகள் தோன்றியிருந்தன.

ஆனால் இந்திய அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்திய அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என கனடா இராஜதந்திர குறிப்பொன்றை  சமர்ப்பித்தது.

இந்த நிலையில் கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா உட்பட தூதர்கள், அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்தது.

இந்திய உயர் ஆணையர், Hardeep Singh Nijjar கொலையில் தொடர்புடைய நபர் – person of interest – என  அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற RCMP, கனடிய தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சித்தனர் என பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார்.

இந்திய சட்ட அமுலாக்க பிரதிநிதிகள் இதற்கு பலமுறை மறுத்தனர் எனவும் அவர் கூறினார்.

ஆனாலும் கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகர், பிற தூதரக அதிகாரிகள் கனடாவில் முன்னெடுக்கப்படும் விசாரணையில்  தொடர்புடைய நபர்கள் என்ற இராஜதந்திரத் தகவல் கிடைத்துள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை (14) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

இவற்றை போலித்தனமான குற்றச்சாட்டுகள் என இந்திய அரசு கடுமையாக நிராகரிக்கிறது.

வாக்கு வங்கி அரசியலை மையமாக கொண்ட Justin Trudeau அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என அவர்கள் தெரிவித்தனர்.

தமது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை கனடா பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் இந்திய அரசாங்கம் கூறுகிறது.

அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை களங்கப்படுத்தும் கனடாவின் திட்டமிட்ட உத்தி இது எனவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவிலுள்ள கனடாவின் மூத்த தூதரக அதிகாரியான வரவழைத்த இந்திய வெளியுறவுத்துறை, தமக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில்  ஆறு கனடிய தூதர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக திங்கட்கிழமை இந்தியா அறிவித்தது

இவர்களில் கனடாவின் தற்காலிக உயர் ஆணையர் Stewart Wheeler, துணை உயர் ஆணையர் Patrick Herbert ஆகியோர் அடங்குகின்றனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு (20) முன்னதாக, இந்த ஆறு தூதரக அதிகாரிகளும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

Ontario எல்லையில் உள்ள Quebec மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Ontario – 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறலாம்

Gaya Raja

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

Lankathas Pathmanathan

Leave a Comment