December 12, 2024
தேசியம்
செய்திகள்

தமிழர் தெருவிழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு: தெருவிழா மேலாளர் கருத்து

கனடிய தமிழர் பேரவையின் Tamil Fest தெருவிழாவை அரசியல்வாதிகள், பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் என பல தரப்பினரும் புறக்கணித்தனர்.

கடந்த சனி (24), ஞாயிற்றுக்கிழமைகளில் (25) தமிழர் தெருவிழா Scarborough நகரின் Markham வீதியில் பெரும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நடுவில் நடைபெற்று முடிந்தது.

முந்தைய ஆண்டுகளை விட இம்முறை இரண்டு நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததை தெருவிழாவின் மேலாளராக – Festival Manager – தன்னை அடையாளப்படுத்தியுள்ளவர் சமூக வலைத்தள பதிவொன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பத்தாவது ஆண்டாக நடைபெற்ற தெருவிழாவுக்கு ஆரம்பம் முதல் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது.

கடந்த வருடத்தின் முடிவில் HD எனப்படும் இமாலய பிரகடனத்தில் கனடிய தமிழர் பேரவையின் பங்கேற்பு முதல் இந்த எதிர்ப்பு எழுந்திருந்தது.

சனிக்கிழமை நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் தலைவர் குமார் ரட்ணம் இமாலய பிரகடனத்தில் கனடிய தமிழர் பேரவையின் பங்கேற்புக்கு மன்னிப்பு கோரினார்.

இம்முறை ஆரம்ப நிகழ்வையும், தொடர்ந்து நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்வுகளையும் அனைத்து மட்ட அரசியல் தலைவர்கள் பலரும் புறக்கணித்தனர்.

தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளில் Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் ஜுவானிடா நாதன் தவிர ஏனையவர்கள் அனைவரும் இம்முறை தமிழர் தெருவிழாவில் கலந்து கொள்ளவில்லை.

நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய பல வர்த்தகர்களும் இறுதி நேரத்தில் நிகழ்வில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கி இருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் வழங்குவதாக விளம்பரப்படுத்தப்பட்ட பல கலைஞர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்தனர்.

தென்னிந்திய திரைப்பட பாடகர் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்ட இசை நிகழ்வு சனிக்கிழமை இடைநிறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்கார்கள் மேடை நோக்கி பொருட்களை எரிந்தும், கடும் வார்த்தைகளால் கூச்சலிட்டும் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இசை நிகழ்வு நடைபெறவில்லை.

ஆர்ப்பாட்டக்கார்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு முன்னெடுத்த எதிர்ப்பு காரணமாக பல நிகழ்வுகள் நடைபெறவில்லை.

 

Related posts

Torontoவில் இந்த பருவத்தின் முதலாவது பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

Lankathas Pathmanathan

April மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் வரவு செலவு திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment