Toronto பெரும்பாகத்தில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது என RCMP தெரிவிக்கிறது.
இது குறித்த விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 62 வயதான Ahmed Fouad Mostafa Eldidi, 26 வயதான Mostafa Eldidi எனவும் இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
Richmond Hill நகர விடுதி ஒன்றில் கைதான இவர்கள் இருவரும் தந்தை, மகன் என RCMP அறிவித்தது.
பல காவல்துறை சேவைகளை உள்ளடக்கிய ஒரு மாத விசாரணைக்குப் பின்னர் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை RCMP உதவி ஆணையர் Matt Peggs அறிவித்தார்.
பயங்கரவாத தாக்குதலை திட்டமிடும் இறுதிக் கட்டத்தில் இவர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் இவர்கள் மீது பயங்கரவாதம் தொடர்பான மொத்தம் 9 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் Scarboroughவில் ஒரே முகவரியில் வசிப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இவர்கள் இருவரும் கனடிய குடியுரிமை கொண்டவர்கள் என கூறிய RCMP, அவர்கள் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றவர்களா என்ற விபரத்தை வெளியிடவில்லை
இவர்கள் இருவரும் இஸ்லாமிய அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சமீபத்தில் ஆயுதங்கள் கொள்வனவு செய்ததாகவும் RCMP குற்றம் சாட்டியது.
இவர்கள் இருவரும் Torontoவில் தீவிர வன்முறைத் தாக்குதலை திட்டமிட்டனர் எனவும் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் RCMP கூறியது.
ஆனாலும் அவர்களால் எதிர்கொள்ளப்பட்டிருக்கு கூடிய அச்சுறுத்தலின் தன்மை குறித்து தகவல் வெளியிட தடை உத்தரவு அமுலில் உள்ளது.
இதனால் Toronto நகரவாசிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவர் கூறினார்.
இவர்கள் திங்கட்கிழமை (29) நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
தொடர்ந்தும் காவல்துறையினர் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் மற்றொரு நீதிமன்ற விசாரணைக்கு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் படுத்தப்படுவார்கள்.