வாகனத் திருட்டு விசாரணை ஒன்றில் Peel பிராந்திய காவல்துறையினர் 16 பேரை கைது செய்துள்ளனர்.
மிகவும் திட்டமிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கை இதுவென Peel பிராந்திய காவல்துறையினர் தலைவர் நிசான் துரையப்பா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் தவிர, இந்த வாகன திருட்டு விசாரணை தொடர்பாக மேலும் 10 நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.
20 வயதான Toronto நகரை சேர்ந்த சருகன் ராஜா, 21 வயதான Toronto நகரை சேர்ந்த அபினாஷ் சண்முகநாதன் ஆகிய தமிழர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்
இந்த விசாரணையில் இதுவரை மொத்தம் 322 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (27) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Peel பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டனர்.
Project Odyssey என பெயரிடப்பட்ட இந்த விசாரணை October 2023இல் ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விசாரணையில் தொடர்புடைய 26 சந்தேக நபர்களில், 14 பேர் திருட்டு தொடர்பான குற்றங்களுக்காக ஏற்கனவே கைதானவர்கள் என தெரியவருகிறது.
Peel பிராந்திய காவல்துறையின் மிக முக்கியமான வாகனத் திருட்டு விசாரணை இதுவாகும் என நிசான் துரையப்பா செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விசாரணையில் 369 திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவற்றில் Peel பிராந்தியத்தில் 255 வாகனங்களும், Montreal துறைமுகத்தில் 114 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மீட்கப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு 33.2 மில்லியன் டொலர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.