கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களில் பத்து பேர் தேர்தலில் போட்டியிட தகுதி உள்ள வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (03) இந்த அறிவித்தல் வெளியானது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 ஆவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
கனடாவில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன .
இந்த விடயம் குறித்து எழுந்த விமர்சனங்களை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் முறையீட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமித்தது.
இந்த ஆணைக்குழு முறையாக, முழுமையாக, உரிய காலத்தில், செய்யப்பட்ட தேர்தல் முறையீட்டு விண்ணப்பங்களை முழுமையாக பரிசீலித்ததாக வெள்ளியன்று வெளியான ஊடக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கையில் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் போட்டியிட தகுதி உள்ள வேட்பாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.
மகாஜெயம் மகாலிங்கம், நிமால் விநாயகமூர்த்தி, டேவிட் தோமஸ், சிவமோகன் சிவலிங்கம், எரிக் சேவியர், சபாநாதன் கதிரமலை, சந்திரகுமார் சாண் கிருஷ்ணசாமி, அன்பரசி கெளரி ஐயாத்துரை, ரவீந்திரன் இராசநாயகம், சந்திரகுமார் இராமகிருஷணா ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முறையீட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு ஆணையாளர்கள் மூவரும் முறையீடுகளை பரிசீலித்து இவர்களின் தேர்தல் விண்ணப்பங்கள் நிராகரித்தமையை மீளப் பெற்றுள்ளனர்.
இவர்களின் தொகுதிகளில் மட்டும் எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடத்தும் படி சுயாதீன ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
எதிர்வரும் வரும் ஞாயிற்றுக்கிழமை (05) ஐந்து தொகுதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ள தேர்தல்களை எந்த இடையூறும் இன்றி முழுமையாக நடாத்தவும் சுயாதீன ஆணைக்குழு வலியுறுத்துகின்றது.
நடைபெறவுள்ள கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதில் கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.