தேசியம்
செய்திகள்

இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள்

தலைநகர் Ottawaவில் பலியான இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Ottawa நகர வரலாற்றின் மிகப்பெரிய கொலையில் பலியான ஆறு பேரின் இறுதிச் சடங்கு  ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் நடைபெற்றது.

தர்ஷனி பண்டாரநாயக்கா, அவரது நான்கு பிள்ளைகள், குடும்ப நண்பரான காமினி அமரகோன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் Justin Trudeau சார்பில் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார்.

இறுதிச் சடங்கின் போதும் அதற்குப் பின்னரும் ஒற்றுமையின் அவசியத்தை அரசாங்கத்தின் பல நிலைகளை சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

சமூக ஆதரவு இந்த கொலைகளால் பாதிக்கப்பட்டுள்ள  உறவினர்கள் எதிர்கொள்ளும் வலியைக் குறைக்கும் என நம்புவதாக பிரதமர் Justin Trudeau வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Ottawa நகர முதல்வர் Mark Sutcliffe, Nepean மாகாணசபை உறுப்பினர் Lisa MacLeod, Barrhaven கிழக்கு நகரசபை உறுப்பினர் Wilson Lo, Monsignor பாடசாலையின் அதிபர் Vincenza Nicoletti உள்ளிட்ட பலரும் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

சர்வமத பிரார்த்தனைகளுடன் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது.

Ottawa புறநகர் பகுதியில் 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா, 7 வயதான இனுக்கா விக்கிரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான றினாயனா விக்கிரமசிங்க, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்க, 40 வயதான காமினி அமரகோன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் கடும் காயங்களுடன் உயிர் பிழைத்த தந்தை தனுஷ்க விக்கிரமசிங்க இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

இந்த சோகம் தன்னையும் தனது குடும்பத்தையும் ஆழமாக உலுக்கியுள்ளது என ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தனுஷ்க விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து கனடா வந்திருந்தனர்.

ஆனாலும் காமினி அமரகோனின் குடும்பத்தினர் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கனடா வருகை தரவில்லை என தெரியவருகிறது.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயதான Febrio De-Zoysa கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 6 முதல்தர கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் Ewan Lyttle கூறினார்.

Febrio De-Zoysa மீண்டும் March 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

இந்த கொலைகளுக்கான காரணம் எதையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

அதேவேளை குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட இணக்கம்

Lankathas Pathmanathan

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Lankathas Pathmanathan

Leave a Comment