கனேடியத் தமிழர் கூட்டு என்பது புதிதாக உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அல்ல என வலியுறுத்தப்பட்டது.
கனேடியத் தமிழர் கூட்டு – Canadian Tamil Collective – என்னும் குழு, கனடியத் தமிழர் பேரவை – CTC – தொடர்பாக தமிழ் ஊடகர்களுடனான சந்திப்பை வெள்ளிக்கிழமை (23) நடத்தியது.
இந்த ஊடக சந்திப்பில் கனேடியத் தமிழர் கூட்டின் சார்பில் மதிப்பிற்குரிய அருட்தந்தை
ஜோசப் (f) சந்திரகாந்தன், அபிமன்யு சிங்கம், நீதன் சான், லஷ்மி வாசன், மரியோ புஷ்பரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊடகர் சந்திப்பை வழக்கறிஞர் அபிமன்யு சிங்கம் தலைமை தாங்கி நெறிப்படுத்தினார்.
கனடியத் தமிழர் பேரவையின் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்ட மதிப்பிற்குரிய அருட்தந்தை ஜோசப் (f) சந்திரகாந்தன், CTCயின் அண்மைக்கால நகர்வுகள் குறித்த தனது அதிருப்தியை தனது உரையில் வெளிப்படுத்தினார்.
‘இமாலய பிரகடனம்’ குறித்த கனேடியத் தமிழர் கூட்டின் கரிசனையை கல்விச் சபை உறுப்பினர் நீதன் சான் விரிவாக விளக்கினார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட மக்கள் ஆணையில் இருந்து CTC விலகிச் செயல்படுவது குறித்த கரிசனையை இந்த மாநாட்டில் குடிவரவு, அகதிகள் உரிமைகள் குழுவை நெறிப்படுத்திய சட்டவாளர் லஷ்மி வாசன் வெளிப்படுத்தினார்.
2009 முதல் 2017 காலப் பகுதிவரை CTC அமைப்பில் இணைந்து செயல்பட்ட சட்டவாளர் மரியோ புஷ்பரட்ணம் ஏனைய நால்வருடன் இணைந்து ஊடகர் சந்திப்பின் கேள்வி பதில் பகுதியின் போது பதிலளித்தார்.
CTCயிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு மட்ட உரையாடல்களையும் சந்திப்புக்களையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து முன்னெடுத்த நிலையில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.
குறிப்பாக, உலகத் தமிழர் பேரவை – GTF – முன்னெடுப்பில், CTCயின் அனுசரணையுடன், முன்னெடுக்கப்படும் இமாலயப் பிரகடன செயற்திட்டம் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
CTC, கனடியத் தமிழர்களின் குரலாக தொடந்தும் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதை உறுதி செய்வதே நோக்கம் எனவும் , மாறாக CTCயை செயலிழக்க வைப்பது தமது குழுவின் நோக்கம் அல்ல எனவும் இந்த ஊடக சந்திப்பின் ஆரம்பத்தில் அபிமன்யு சிங்கம் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக CTCயின் இமாலய பிரகடனம் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கான கூட்டு முயற்சியை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என கூறிய அவர், கனேடியத் தமிழர் கூட்டின் நீட்சி இதன் தொடர்ந்த தேவையில் மட்டுமே தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
கனடியத் தமிழர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் CTC, கனடியத் தமிழர்களின் ஆணையைப் பெறாமல், இமாலயப் பிரகடனத்தில் தன்னிச்சையாக செயல்படுவது குறித்த கடுமையான கண்டனங்கள் ஊடக சந்திப்பில் அனைவராலும் வெளிப்படுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாக, CTC உறுப்பினர்கள், ஆலோசகர்கள், ஆதரவாளர்கள், நிர்வாக குழுவுடன் பல சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும் இந்தக் கூட்டங்கள் இமாலயப் பிரகடனத்தில் CTCயின் ஈடுபாடு தொடர்பான கனடிய தமிழர்களின் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிப்பதில் கவனம் செலுத்தியதாகவும் கூறப்பட்டது.
CTC இமாலய பிரகடனத்தில் இருந்து உடனடியாக தம்மை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோள் இந்த சந்திப்புகளும் உறுதியாக வெளிப்படுத்த பட்டுள்ளதாகவும் கூறிய கனேடியத் தமிழர் கூட்டு, இது குறித்த நடவடிக்கைகளில் தொடர்ந்து உறுதியாக பயணிக்க உள்ளதாகவும் தெரிவித்தது.