Ontario மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகள் கடந்த இரண்டு நாட்களாக பல வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக மூடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்
அடையாளம் காணப்பட்ட இந்த அச்சுறுத்தல்கள், ஆங்கிலம், பிரெஞ்சு கத்தோலிக்க வாரியங்கள் உட்பட மதம் சார்ந்த, மதம் சாராத பாடசாலைகள், தவிரவும் குறைந்தது ஒரு யூத பாடசாலையையும் உள்ளடக்குகின்றது.
இதனால் குறிப்பிட்ட பாடசாலைகளில் இருந்து அனைவரையும் வெளியேற்றிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வடக்கு, கிழக்கு Ontarioவின் சில பகுதிகளில் பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக Ontario மாகாண காவல்துறை (OPP) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
பல பாடசாலை வாரியங்களை குறிவைக்கும் இந்த அச்சுறுத்தல்கள் பணம் செலுத்த கோரும் மிரட்டல்களையும் உள்ளடக்குகின்றது என OPP தெரிவித்தது
வடக்கு Ontarioவில் உள்ள Timmins பகுதியில் நான்கு பாடசாலை வாரியங்களும், அந்த நகரத்தைச் சுற்றி உள்ள சமூகங்களின் பாடசாலைகளும் காவல்துறையினரின் ஆலோசனையின் பேரில் புதன்கிழமை மூடப்பட்டன.
Toronto பெரும்பாக பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகள் புதன்கிழமை பிற்பகல் வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக மூடப்பட்டன.
Kipling உயர்நிலைப் பாடசாலை, Lakeshore உயர்நிலைப் பாடசாலை, Western தொழில்நுட்ப-வணிக பாடசாலை ஆகியன வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்டன.
Hamiltonனுக்கு அருகிலுள்ள Burlingtonனில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றும் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.
கிழக்கு Ontarioவில், கிராமப்புற பிரெஞ்சு கத்தோலிக்க பாடசாலைகள் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்டன.
செவ்வாய்கிழமை, Ottawa யூத சமூகப் பாடசாலை அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து Ottawa நகர காவல்துறை விசாரணைகளை முன்னெடுக்கிறது.