அத்தியாவசிய மருந்துகளின் பெருமளவிலான ஏற்றுமதியை தடுக்க மாகாணங்களுடன் இணைந்து செயல்படுவதாக கனடாவின் மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.
உணவு, மருந்துகள் சட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் அதிக அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டப்பூர்வ வழிகள் ஆராயப்படும் என அமைச்சர் Duclos வியாழக்கிழமை (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கனடாவில் இருந்து நீரிழிவு, எடை இழப்பு மருந்தான Ozempic பெருமளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சம்பவம் ஒரு அபத்தமான துஷ்பிரயோகம் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
Nova Scotiaவில் பயிற்சி செய்ய உரிமம் பெற்ற அமெரிக்காவின் Texas மாநிலத்தை தளமாகக் கொண்ட மருத்துவர் Ozempic மருந்துக்காக 17 ஆயிரம் மருந்துச்சீட்டுகளை எழுதியது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனடியர்களுக்கான Ozempic மருந்துகள் கிடைக்க வழி செய்வது குறித்து மத்திய, மாகாண அரசாங்கங்களின் உதவி துணை சுகாதார அமைச்சர்கள் விவாதித்து வருவதாக British Colombia மாகாண சுகாதார அமைச்சர் Adrian Dix தெரிவித்தார்.