கனடிய தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு ஆதரவாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இது குறித்த ஒரு தீர்மானத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (02) நிறைவேற்றினர்.
தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய பொது விசாரணையை மத்திய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
குறிப்பிட்ட விசாரணையை பிரதமர் Justin Trudeau ஆரம்பிக்க வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
கடந்த இரண்டு பொது தேர்தலில் சீனாவின் தலையீடு முயற்சிகள் குறித்து உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகளின் பல மணிநேர சாட்சியங்களின் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைமுறை, வீட்டு விவகார நாடாளுமன்ற குழுவின் இரண்டு விவாதத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் 6 க்கு 5 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
NDP முன்வைத்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், எதிராக Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.