சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்ட கனடிய அரசின் கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
சீனா உட்பட மூன்று நாடுகளில் இருந்து கனடாவுக்குள் நுழையும் விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (05) முதல் அமுலுக்கு வருகிறது.
கனடாவுக்குள் நுழையும் சீனா, ஹாங்காங், மக்காவோ விமானப் பயணிகள் COVID தொற்றுக்கு எதிரான சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (31) இந்த அறிவித்தலை கனடிய மத்திய அரசாங்கம் வெளியிட்டது.
இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு வயதிற்கும் மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளுக்கும் இந்த சோதனை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சீனா அச்சுறுத்தியுள்ளது.
சீனாவை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் அறிவியல் அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தார்.
அரசியல் நோக்கங்களுக்காக COVID நடவடிக்கைகளை கையாளும் முயற்சிகளை உறுதியாக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயத்தில் கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.