மேம்படுத்தப்பட்ட சலுகையுடன் Ontario அரசாங்கம் கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (04) முதல் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை செவ்வாய்கிழமை (08) முடிவுக்கு கொண்டு வர கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் CUPE முடிவு செய்தது.
Ontario அரசாங்கம் Bill 28 என்னும் மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை மீளப் பெறுவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை CUPE எடுத்திருந்தது.
மசோதா 28 முழுமையாக இரத்து செய்யப்படும் என கல்வி அமைச்சர் Stephen Lecce அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தொழிற்சங்கத்துடன் சண்டையிடும் கட்டத்தை கடந்து விட்டதாக செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த முதல்வர், வார இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடைய வேண்டும் என விரும்புவதாக கூறினார்.
ஆனாலும் பேச்சுகளில் அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட சலுகைகளின் விபரங்களை Ford வெளியிடவில்லை.
மாகாணத்துடனான CUPE தொழில்சங்கத்தின் பேச்சுவார்த்தை கடந்த 30ஆம் திகதி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மசோதா 28ஐ மீளப் பெறுவதற்கு இந்த வாரம் ஏன் மாகாணசபை உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு திரும்ப அழைக்கப்படவில்லை என Ontarioவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியது.
மாகாணசபை உறுப்பினர்கள் இந்த வாரம் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை.
மீண்டும் சட்டமன்ற அமர்வுகள் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.