வெள்ளிக்கிழமை (04) ஆரம்பான தமது வேலை நிறுத்தம் அடுத்த வாரமும் தொடரும் என Ontario கல்வி ஆதரவாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்தது.
மறு அறிவித்தல் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 55 ஆயிரம் கல்வி ஆதரவாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் CUPE வெள்ளியன்று தெரிவித்தது.
சட்டசபையில் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என வியாழக்கிழமை (03) சட்டம் இயற்றப்பட்ட போதிலும், கல்வி ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வேலையை விட்டு வெளியேறி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வெள்ளியன்று மாகாண ரீதியில் 100க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
Ontario சட்டசபைக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் 8 முதல் 10 ஆயிரம் பேர்வரை கலந்து கொண்டதாக காவல்துறை மதிப்பிடுகிறது.
முதல்வர் Doug Ford, கல்வி அமைச்சர் Stephen Lecce உட்பட பல அரசாங்கத்தின் மாகாணசபை உறுப்பினர்களின் அலுவலகத்திற்கு வெளியே போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்கள் மாகாணம் முழுவதும் பல கல்வி சபைகள் பாடசாலைகளை மூடுவதற்கு வழிவகுத்தது.
இந்த போராட்டங்கள் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ள நிலையில், பல கல்வி சபைகள் வேலை நிறுத்தத்தின் இறுதிவரை பாடசாலைகளை மூடி வைத்திருக்க முடிவு செய்துள்ளன.
Ford தலைமையிலான அரசாங்கம் வியாழக்கிழமை வேலை நிறுத்த எதிர்ப்பு சட்டத்தை இயற்றினர்.
இது கல்வி ஆதரவாளர்ககளை வேலை நிறுத்தத்திலிருந்து தடுக்கும் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தை விதிக்கிறது.
ஆனாலும் வேலை நிறுத்தம் குறித்து Ontario முதல்வர் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.
வெள்ளி காலை Royal விவசாய குளிர்கால கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதை முதல்வர் இரத்து செய்தார்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை, சட்டவிரோதமானது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு Ontario தொழிலாளர் உறவுகள் வாரியத்திடம் கல்வி அமைச்சர் Lecce கோரியுள்ளார்.