வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் Ontario கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது.
Ontario கல்வித் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் புதன்கிழமை (03) இந்த அறிவித்தலை வெளியிட்டது.
அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாது விட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கல்வி ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் CUPE, வெள்ளிக்கிழமை முதல் மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கிறது.
வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக்கும் சட்டம் உள்ள போதிலும் தமது உறுப்பினர்கள் இந்த வேலை மறுப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என புதனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் CUPE தெரிவித்தது.
வெள்ளிக்கிழமையை தாண்டியும் மாகாணம் தழுவிய வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கம் உறுதியளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்
Ontario கல்வி அமைச்சர் Stephen Lecce , கனடிய பொது ஊழியர் சங்கத்தின் எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் தடுக்கும் சட்டமூலம் ஒன்றை திங்கட்கிழமை (31) மாகாண சபையில் சமர்ப்பித்தார்.
இந்த சட்டமூலம் தொழிற்சங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சுமார் 55 ஆயிரம் உறுப்பினர்கள் மீது புதிய நான்கு ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தை திணிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த மசோதா வியாழக்கிழமை (03) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க அது அனுமதிக்கும்.
தனிநபர்களுக்கு எதிரான அபராதம் 4 ஆயிரம் டொலர்களாக இருப்பினும் தொழிற்சங்கத்திற்கு எதிராக 500 ஆயிரம் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.