உக்ரைன் நகரங்களில் அப்பாவிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுடன், ரஷ்யா மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
உக்ரேனிய குடிமக்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அதிர்ச்சியடைகிறேன் என பிரதமர் தெரிவித்தார்.
திங்கள், செவ்வாய் கிழமைகளில் உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என பிரதமர் Trudeau கூறினார்.
தொடர்ச்சியான இராணுவ உதவியை வழங்குவது உட்பட உக்ரைனை ஆதரிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் ஜனாதிபதியுடன் கனடிய பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலின் போது ரஷ்யாவின் தாக்குதலுக்கு வலுவான G7 நாடுகளின் எதிர்வினையின் முக்கியத்துவத்தை உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த தாக்குதல்கள் வெறுக்கத்தக்கவை என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கண்டித்தார்.
இந்த தாக்குதல்களை கடுமையான வார்த்தைகளில் கண்டிப்பதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை கனடிய வெளியுறவு அமைச்சர் செவ்வாய்கிழமை டோக்கியோவில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில் Joly, ரஷ்யா மீதான தனது கண்டனத்தை வெளியிட்டார்.
உக்ரைனுக்கான கனடிய தூதர், உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து பேசியதாக அவர் கூறினார்.
உக்ரைனில் உள்ள கனேடிய தூதரகத்தில் உள்ள ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என உக்ரைனுக்கான கனடிய தூதர் உறுதிப்படுத்தினார்.
உக்ரேன் – ரஷ்யா போரின் பின்னர் நிகழ்ந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவென அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் 19 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.