கனடாவில் இதுவரை 15 Monkeypox தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை (25) இந்த தகவலை வெளியிட்டது.
இந்த நிலையில் கனடாவில் Monkeypox தொற்று பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos புதன் மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கனடா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகமான ஆய்வக மாதிரிகள் Winnipegகில் உள்ள கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் பல தொற்றுக்கள் உறுதி செய்யப்படுவதை கனடியர்கள் எதிர்பார்க்கலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
கனடிய அரசாங்கம் பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறும் சுகாதார அமைச்சர், தொற்றின் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மாகாணங்களும் பிரதேசங்களும் இந்த தொற்றின் பரிசோதனைக்கான சொந்த வழிமுறைகளை உருவாக்குவதற்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் Duclos கூறினார்.
இந்த தொற்றை தவிர்ப்பதற்காக, கனடியர்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்து உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கவும், அடிக்கடி கைகளை கழுவவும், நெரிசலான சூழலில் முகமூடிகளை அணியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.