ரஷ்யாவுக்கு எதிரான போரில் முக்கியமானதாக கருதப்படும் மேலும் ஆயுதங்களை கனடா உக்ரைனுக்கு அனுப்புகின்றது.
British Colombiaவில் உள்ள உக்ரேனிய கலாச்சார மையத்தில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை (24) இதனை அறிவித்தார்.
98 மில்லியன் டொலர் பெறுமதியான 20 ஆயிரம் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு கனடா அனுப்புகிறது.
2022ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் டொலர்களில் இருந்து இந்த நிதி பெறப்படுகின்றது.
உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துவதற்கு கனேடிய ஆயுதப் படைகள் பயிற்சி அளித்துள்ள பீரங்கி துப்பாக்கிகளில் இந்த வெடிமருந்துகளை உபயோகிக்க முடியும் என கனடிய தேசிய பாதுகாப்புத் துறை கூறுகிறது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய போரில், இந்தக் கூடுதல் இராணுவ உதவி முக்கியமானதாக இருக்கும் என அமைச்சர் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உதவியை உக்ரைனுக்கு விரைவில் வழங்குவதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.