உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்களை இனப்படுகொலை என கூறும் பிரேரணைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (27) ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
NDP நாடாளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு விமர்சகருமான Heather McPherson ஒரு பிரேரணையை முன்வைத்ததை அடுத்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ரஷ்ய கூட்டமைப்பு உக்ரேனிய மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை முன்னெடுக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும் என அந்த பிரேரணை கோரியது.
ரஷ்ய நாடாளுமன்றத்தினாலும் ஜனாதிபதி Vladimir Putinனினாலும் வழிநடத்தப்படும் ரஷ்ய ஆயுதப்படைகளின் மனிதகுலத்திற்கு எதிரான பாரிய போர்க்குற்றங்களுக்கு தெளிவான சான்றுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த பிரேரணை பரந்த சர்வதேச சட்டத்தின் கீழ் நேரடி விளைவுகளை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது .
உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என அழைப்பது முற்றிலும் சரியானது என இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.