நான்கு பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் உக்ரைனுக்கு கனடா அனுப்பியுள்ளது.
வெள்ளிக்கிழமை (22) வெளியான ஒரு ஊடக அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
கனேடிய ஆயுதப் படைகளிடமிருந்து இந்த ஆயுதங்கள் உக்ரைனின் பாதுகாப்புப் படைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவதாக பிரதமர் Justin Trudeau வழங்கிய வாக்குறுதியை கனடா நிறைவேற்றியுள்ளது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டவை கனடிய ஆயுதப் படைகளின் உபகாரணங்களின் ஒரு பகுதியாகும் என கூறிய கனடிய அரசாங்கம் அவை மீள நிரப்பப்படும் எனவும் கூறியது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்த மேலதிக விபரங்களை வழங்க பாதுகாப்பு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
உக்ரேன் தமக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து என்ன தகவல் பகிரப்படுகிறது என்பதில் கவனமாக இருக்குமாறு கூட்டு நாடுகளை கோரியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கனடாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு கனேடிய உக்ரேனிய காங்கிரசின் தலைவர் நன்றி தெரிவித்தார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க கனடிய அரசாங்கம் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மேலும் 500 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.