Ottawaவில் தொடரும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக, Ottawa நகரவாசிகள் சார்பாக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக Ottawa நகரத்தை முடக்கியுள்ள தொடரணியின் ஏற்பாட்டாளர்கள் 9.8 மில்லியன் டொலர் வழக்கை எதிர்கொள்கின்றனர்.
Ontario உயர் நீதிமன்றத்தில் இந்த நஷ்டஈடு வழக்குக்கான கோரிக்கை அறிக்கை வெள்ளிக்கிழமை (04) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, தனியார் தொல்லைக்காக 4.8 மில்லியன் டொலர்களும் தண்டனைக்குரிய சேதங்களுக்கு 5 மில்லியன் டொலர்களும் நஷ்ட ஈடு கோருகிறது.
இந்த வழக்கில் போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களாக நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆனால் 60 பேர் வரையிலான பிரதிவாதிகள் பெயரிடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கின் முன்னணி வாதியான 21 வயதான ஒரு பொது ஊழியர் பெயரிடப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த போராட்டங்களுக்கான இணையவழி நிதி திரட்டல் GoFundMe நிறுவனத்தினால் அகற்றப்பட்டது.
இந்த போராட்டம் வன்முறை, துன்புறுத்தல் தொடர்பான விதிகளை மீறுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை வெளியான அறிக்கையில் GoFundMe நிறுவனம் கூறுகிறது.
GoFundMe முதலில் இந்த நிதி திரட்டலை புதன்கிழமை இடைநிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.