“துரோகி சுமந்திரன் கனடாவிலிருந்து விரட்டப்பட்டார்” என்று ஒரு சிறு பகுதியினர் கடந்த சில வாரங்களாகப் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். ஸ்காபரோவில் சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டம் குழப்பப்பட்டதைத்தான் அவர்கள் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். குழப்பிய பெருமக்கள் யார்…? அவர்களின் பின்னால் நின்று எந்த அமைப்பு இயங்கியது என்பதெல்லாம் ஊர் அறிந்த பரம ரகசியம். வேடிக்கை என்னவென்றால் அந்த அமைப்பிலிருக்கும் சிலர், அந்தக் கூட்டம் குழப்பத்தில் முடிந்ததற்கு “கூட்டத்தின் அமைப்பாளர்கள்போல தம்மை தன்னிச்சையாக வெளிக்காட்டிய இருவர்தான் முழுக் காரணம்” என குற்றம் சாட்டவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்கள் குறிப்பிடும் அந்த இருவரில் ஒருவர் தாவீது பூபாலபிள்ளை. மற்றவர் ‘சுவிஸ்’ முரளி என்றழைக்கப்படும் முரளிதரன் நடராஜா. இதில் வெறும் பார்வையாளராக வந்து தன் வாயால் சிக்கலில் மாட்டிக்கொண்ட பூபாலபிள்ளையை விட ‘சுவிஸ்’ முரளி மீதுதான் சொல்லி வைத்தாற்போல புகார்கள் காட்டத்தோடு குவிகின்றன. அவற்றுக்கு சிகரம் வைத்தாற்போல, “இரவினில் ஆட்டம்…” என்ற ‘நவராத்திரி’ படப் பாடலுக்கு முரளிதரன் நடராஜா டிஸ்கோ ஆடும் (நடன-ராஜா முரளிதரன்?) கிண்டல் வீடீயோ ஒன்றும் பரவலாக தற்போது வைரலாகி வலம் வருகிறது.
அந்த வீடியோவின் உள்நோக்கம், இரவிரவாக M.A.சுமந்திரன், முரளி போன்றோர் கேளிக்கை நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டு பகலில் கூட்டம் நடத்துகிறார்கள் என்ற கருத்தை பாமரர்களிடம் விதைப்பதேயாகும். இதே பாணியில்தான் கருணா அம்மானுக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரங்களும் “மக்களால்” நடத்தப்பட்டன. முரளிதரன் நடராஜா ஆதரித்த விடுதலைப் புலிகள் தலைவர்களுள் ஒருவராக இருந்த அன்டன் பாலசிங்கம் கிளுகிளுப்பூட்டும் வகையில் செய்து காட்டிய ‘ஆனந்த சங்கரி-உடும்புக்கறி’ எதிர்ப்பிரச்சாரங்களின் அடியொற்றி வருபவைதான் இந்த வகைப் பிரச்சாரங்கள்.
“தம்பியவை. இங்க நிண்டு கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டிருக்காதயுங்கோ. நாட்டுக்கு வாங்கோ.. அப்பதான் கனக்க விளங்கும் உங்களுக்கு…”
அரசியல் கூட்டங்களைக் குழப்ப முனைவது கனடாவிற்கு தமிழர்கள் வந்து சேர்ந்த ஆரம்ப காலம் முதலே நடந்து கொண்டுதான் வருகின்றது. 1980களின் நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அ.அமிர்தலிங்கம் கனடா வந்தபோது மொன்ரியாலில் ஒரு கூட்டத்தை கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. அமிர்தலிங்கத்தின் உரை முடிந்தபின்னர் புளொட் இயக்க அனுதாபிகளாக தம்மை அக்காலத்தில் வெளிக்காட்டிய ஒரிருவர் சப்திக்க ஆரம்பித்தனர். தெனாவெட்டாக அவர்கள் கேள்விகளைக் கேட்ட தோரணையும், குரல் தொனியும் விழா அமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, வந்திருந்த பொதுமக்களில் பலருக்கும்கூட கோபத்தை வரவழைத்தது. அமிர்தலிங்கமாவது பயப்படுவதாவது. “தம்பியவை. இங்க நிண்டு கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டிருக்காதயுங்கோ. நாட்டுக்கு வாங்கோ.. அப்பதான் கனக்க விளங்கும் உங்களுக்கு…” என்று ஒத்தைக்கு ஒத்தை பாணியில் பொறுப்பாகப் பதில் சொன்னார் அமிர்தலிங்கம்.
இதுபோலத்தான் Bob Rae பங்கேற்ற ஒரு கூட்டத்தை இன்று மதிப்புக்குரிய அரசியல் பிரமுகர்களாக இருக்கும் ‘Liberal’ கரி ஆனந்தசங்கரி, ‘NDP’ நீதன் ஷான் உட்பட பல பிரமுகர்களும், அடியார்களும் குழப்பியிருந்தார்கள். (அன்றைய அவர்களது வயதுக் கோளாறுதான் அதற்குக் காரணமோ?) தற்போதைய சுமந்திரன் கூட்டத்தை ஒழுங்கு செய்த வேலுப்பிள்ளை தங்கவேலு (நக்கீரன் ஐயா) போன்றோர்கூட ஒரு காலத்தில் இதே பாணியில் அமளி துமளியாக நடந்து கொண்டவர்கள்தான் என்றும் தற்போது விமர்சனம் கிளம்பியிருக்கிறது. இன்னாரென்னபிற “முன்வழிகாட்டல்” அடியொற்றித்தான் தற்போது சுமந்திரன் கூட்டக் குழப்பமும் வருகிறது.
அரசியலில் மட்டும்தான் இது நடக்கிறதோ என்று குழம்பிட வேண்டாம். Rogers Centerரில் இசை விருந்தளிக்க அழைக்கப்பட்ட இசைஞானி இளையராஜா தனது நிகழ்ச்சியில் “விசில் அடிக்க வேண்டாம்” என்றுவிட்டார். விடுவோமா நாம்… “உவர் ஆர் எங்களுக்குச் சொல்ல?” என்ற நினைப்புடன் முழுப் பைத்தியக்காரர்கள்போல வேண்டுமென்றே கீ.. கீ .. என்று விசில் அடித்தோம். (சுதந்திர தாகமாம் அது.) அதற்கு மேலாக தாகசாந்தி செய்த ஒரு பிரகிருதி “டேய்.. இளையராஜா” என்றும் கூச்சல் போட்டது! ஒரு பொது நிகழ்ச்சியில் மற்ற ரசிகர்களுக்கு – குறிப்பாக அங்கு வந்த இளையராஜா இசை ரசிகர்களுக்கு அசௌகரியம் தரும்வகையில் நம் நடவடிக்கைகள் இருக்கிறதே.. ஈழத்தமிழர் நாம் இப்படி நடக்கலாமா? இதுதான் எங்கள் பண்பாடா?? இதற்கெல்லாம் முறையான பதில் எம்மிடம் இல்லை. மாறாக “உவரின்ரை தலைக்கணத்தை உப்பிடித்தான் அடக்க வேணும்..” “காசு கொடுத்து நிகழ்ச்சி பார்க்க வந்தவனுக்கு சுதந்திரம் இருக்கு..” என்றெல்லாம் சொன்னவரும் உளர்.
“ஒரு நாகரீகமான சபையில் காட்டுமிராண்டிகள்போல அநாகரீகமாக நடக்கிறீர்களே” என்றுகூடக் கேட்காமல் துட்டரைக் கண்டதுபோல “தூர விலகி”ச் செல்கிறோம்.
பொது நிகழ்வுகளில், குறிப்பாக பலதரப்பட்ட எண்ணப்பாடுகள் உள்ளவர்கள் ஒருமித்துக் கூடியிருக்கும் சபையிலிருக்குக்கும்போது எந்த வகையில் தமது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியாத ஒருசிலர் – அன்று முதல் இன்றுவரை – தம்மை ஒரு நாட்டாண்மையாக வெளிக்காட்டிக் கொண்டே வருகிறார்கள். நாமும் ஏனோ இவர்களுடைய இந்தப் போக்கை அனுமதித்துக் கொண்டே வருகிறோம். “ஒரு நாகரீகமான சபையில் காட்டுமிராண்டிகள்போல அநாகரீகமாக நடக்கிறீர்களே” என்றுகூடக் கேட்காமல் துட்டரைக் கண்டதுபோல “தூர விலகி”ச் செல்கிறோம்.
ஆம். குழப்பத்தில் முடிந்த சுமந்திரன் கூட்டத்தில் தம்மை வெளிக்காட்டிய புது variantடுகளான ‘Ebola’க்கள் குறித்து மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. “ஒரு புது vaccine இனித் தேவைதான் போலும்” என்றே தோன்றியது. ஸ்ரீலங்கா அரசரின் இரகசிய ஏஜன்ட்டுகள்தான் இப்படி இரட்டை வேடம் தாங்கி அடாவடி செய்கிறார்கள் என்றே ஒரு ஈழத்தமிழனாகச் சந்தேகம் கொள்ள வேண்டியும் இருக்கிறது. யாருக்குத் தெரியும். “சுமந்திரன் கூட்டம்” “அதற்கு எதிரான காட்டம்” இவை இரண்டையும் ஒருமித்து ஒழுங்குபடுத்தியது ஒரு சூத்திரதாரிதானோ யாரறிவார்.
சுமந்திரனுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வது கருத்துச் சுதந்திரம்தான். அதை யாரும் தவறு என்று சொல்லிவிடவும் முடியாது. ஆனால் அதற்காக விடுதலைப்புலி ஆதரவாளனாக – தானே தன்னை ஃபீல் பண்ணிக் கொண்டு – புலிக்கொடியைப் பிடித்துக் கொண்டு சுமந்திரன் எதிர்ப்பைச் செய்வோமானால் “கனடாவில் தடைசெய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் தற்போது சுமந்திரனுக்கு எதிராக இருக்கிறார்கள்” என்ற கருத்தைத்தானே மற்றவர்களிடம் விதைக்கிறோம்.
இந்த அரை வேக்காட்டுத்தனம் போதாதென்று, அந்தக் கொடியானது “ஈழத்தமிழர்களின் தேசியக் கொடி” என்ற பிரச்சாரமும் செய்யப்படுகிறது. ஒரு புறத்தில் புலிக்கொடியை தடை செய்யும் அளவு நேர்த்தியோடு இயங்கிவிட்டு, இப்போது அதைப் பிடித்துக் கொண்டு, தேசியக் கொடி இது என்று புலம்புவதில் அர்த்தம் கிடையாது. அந்தக் கொடி விடுதலைப் புலிகள் அமைப்பின் தனித்துவமான கொடியாகவே தொடர்ந்தும் வரலாற்றில் இருக்கட்டும். அதை விட்டுவிடுங்கள். அந்தக் கொடியின்கீழ் நின்று தம்மைப் பலிகொடுத்தவர்கள் ஏராளம். பாவம் அவர்கள். அவர்களை மதிப்பவர்களாக நீங்கள் இருந்தால் அக்கொடி பிடித்தாலும் அக்கொடியை ‘நீங்கள்’ பிடிக்காதீர்கள்!
தேசியக் கொடியைப் பிடிக்க – பிடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை அவசியம்.
அதெல்லாம் போக, ஒரு சந்தேகம் வருகிறது. அது என்ன? இவர்கள் பிடிக்கும் கொடி எனக்கான தேசியக் கொடி என்று எப்படி ஒத்துக் கொள்வது? “எனக்கான தேசியக் கொடியை யார் தீர்மானிப்பது?” என்ற கேள்வி பொதுப்பரப்பில் யாருக்கும் தோன்றுவதில்லையா? இது குறித்த விவாதங்கள் இனியாவது தொடங்கப்பட வேண்டும். “ஈழத்தமிழருக்கான தேசியக் கொடியில் நந்தி, கோயில், மீன், வில்லு, உதயசூரியன், வீடு, சைக்கிள் வடிவங்களைக் காட்டிலும் புலி வடிவம் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பேர்ப்பட்டதொரு கொடி நமக்கு வேண்டும்” என்பது ஒரு தமிழ்மகனாக எனது தீராத அவா. (அங்க சிங்கம் இருந்தா இங்க புலி இருக்கலாந்தானே) அதற்காக ஜனநாயக விழுமியங்களை மறுத்துக் கொடி பிடிக்கும் ஒரு குழு பிடிக்கும் கொடி ஈழத்தமிழனுக்கான தேசியக் கொடியாக ஒருபோதும் மாறாது. தேசியக் கொடியைப் பிடிக்க – பிடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை அவசியம்.
“I support சுமந்திரன்” அல்லது “I support குழப்பியவர்கள்”
இன்னொன்றைக் கவனித்தீர்களா? (i) “கனடா வருகைதந்த” (ii) “ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட” (iii) “நாடாளுமன்ற உறுப்பினர்” சுமந்திரன் கூட்டம் குழப்பப்பட்டது குறித்து இங்கு சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினராயும் இருக்கும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் தன் கருத்தை பொதுப்பரப்பில் வெளிப்படுத்தவில்லை. “I support சுமந்திரன்” அல்லது “I support குழப்பியவர்கள்” என்றெல்லாம் பதிவுகள் போட வேண்டாம். “தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழ் அரசியல் தலைவருக்கு – MPக்கு இப்படி நடந்திருக்கிறது. அதையிட்டு வருத்தமாக இருக்கிறது” என்றாவது ஒரு மிகக் குறைந்த பட்ச தார்மீக நியாயத்தைப் பேசலாமே?! எதுவும் இல்லை.. இதற்கெல்லாம் “வாக்கு வங்கிக் கணக்கோ” அல்லது “வங்கிக் கணக்கோதான்” காரணமாக இருக்க முடியும்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் சந்தேகமற்று உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும்: “சுமந்திரன் கூட்டத்தைக் குழப்பியவர்கள் தமிழ்க் கனடியர்கள் அல்லர்!” தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகத் தம்மை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் ஒரு சிலர்தான் அந்த எதிர்ப்பினைச் செய்தார்களாவர். தமிழ் கனடியர்கள் சுமந்திரனை விரட்டியடித்தார்கள் என்னும் பொய்ப்பிரச்சாரமும் தற்போது அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் விடுதலைப் புலிகள் தீவிர விசுவாசிகள் எல்லோரும் இந்த வகை அநாகரீக, காட்டுமிராண்டித்தனமான செயல்களை ஏற்றுக் கொள்ளவில்லை. என்பதும் பல தரப்பினரிடம் பேசும்போது அறியக்கூடியதாயுமிருக்கிறது. மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர்கள் என அறியப்படுவர்கள் இது குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதாயுமில்லை. ” உந்தக் கூட்டம் உப்பிடித்தான் செய்யும் என்று எங்களுக்கு அப்பவே தெரியும்” என்ற ரீதியில் அவர்கள் தங்கள் தீர்க்க தரிசனத்தை தாமே மெச்சிக் கொள்கிறார்கள். ஆக தீவிர புலி விசுவாசிகள், மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்களுக்கு சுமந்திரன் ஒரு ‘பயமுறுத்தலே’ அல்ல என்பதே நிலைமை.
அவர்கள் நிலைமை அப்படி.. இங்கு அரசியல் கருத்துக்கள் சொல்பவர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் என தம்மை சொல்பவர்கள் நிலைமையோ கவலைக்கிடம். இந்தப் பிரச்சனையில் யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது என்பது புரியாத நிலை. யாழ்ப்பாணத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. ஒழுங்கையால் போன அப்புவை பார்த்து வீட்டு நாய் குரைத்ததாம்.. நாயை அடக்குவதை விட்டுவிட்டு அந்த வீட்டுக்காரர் “அப்புவும் ஒரு ஆள் எண்டு நாய் குலைக்குதோ..” என்று புறுபுறுத்துக் கொண்டு இருந்தாராம். இப்படித்தான் இருக்கிறது இங்குள்ள பலரது அரசியல் ஆய்வு நிலைமை. அந்த அப்பு சுமந்திரனாகவும் இருக்கலாம்.. சுவிஸ் முரளியாகவும் இருக்கலாம்.
“உண்மையைத் தேடி” செல்பவர்க்கு பக்க சார்பு இருக்கக் கூடாது. அதனால் முரளி பற்றிய இந்தப் பார்வை ஆதரவாகவும் + எதிர்ப்பாகவும் இருக்கும்.
இனி இந்த சுவிஸ் முரளி பற்றி கொஞ்சம் பார்க்கலாமே.. (எச்சரிக்கை: “உண்மையைத் தேடி” செல்பவர்க்கு பக்க சார்பு இருக்கக் கூடாது. அதனால் முரளி பற்றிய இந்தப் பார்வை ஆதரவாகவும் + எதிர்ப்பாகவும் இருக்கும்.)
தீவிர இலக்கியச் செயல்பாட்டாளர், பத்தி எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாசிரியர், வெளியீட்டாளர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், NDP அனுதாபி என பல முகங்களை வைத்திருக்கும் முரளியின் சுவிஸ் வரலாறு விடுதலைப் புலிகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. “புலிகளுக்காக சுவிஸ்லாந்தில் பெரும் நிதியை திரட்டியவர்” என்ற பாராட்டுக்களும் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. அதைவிட ‘சபாலிங்கம்’, ‘வன்னியின் அழைப்பு’ என வேறு சிலவும் உண்டு. அவர்மேல் பல ரகப்பட்ட குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்களாக வாய்மொழி மூலம் தற்போது சுமத்தப்படுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை விடுதலைப் புலிகளின் அமைப்பினரால் மட்டும்தான் தெளிவுபடுத்த முடியும் – ஆனால் அந்த அமைப்பினர் எதையும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாயில்லை. சுவிஸ் முரளியின் உரிமை கோரல்களும் இல்லை. முரளியின் சுவிஸ் செயல்பாடுகள் குறித்த சகல நுணுக்க விபரங்களும் கனடிய அரசுக்கும், புலிகள் ஆதரவாளர்களுக்கும், இன்னும் சில அரசியல் நோக்கர்களுக்கும் நன்கு தெரிந்ததேயுமாகும். ஆபத்தான பாதைகளில் மூர்க்கத்தோடு பயணிப்பவர் அவர். சுருங்கச் சொன்னால் விடுதலைப்புலி முன்னாள் தீவிர செயல்பாட்டாளர் அவர்.
அப்படியென்றால் முரளியின் சுமந்திரன் குறித்த ஈடுபாடானது மற்றும் சமகால அரசியல் செயல்பாடானது விடுதலைப்புலி முன்னாள் செயல்பாட்டாளர் ஒருவரின் சமகால கருத்தியல் வளர்ச்சி மாற்றத்தால் ஏற்பட்ட ஈடுபாடாகக் கொள்ளப்பட முடியுமா? “நிச்சயமாகக் கிடையாது” என்பதே என் கணிப்பாகும். முரளியின் தமிழ் அரசியல் செயல்பாடானது “எப்போதுமே சமகாலத்தில் பலமாக இருக்கும் அரசியல் அமைப்புக்களுடன் அவர் தன்னை இணைத்து இனம் காட்டுவதால் உருவாவதாக கணிக்கப்படுதல்” மட்டுமே சரியானதாகும்.
முரளி தனது சிறுவயதிலிருந்தே தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் என அந்த அந்தக் காலகட்டத்தில் பலமானவற்றுடன் தன்னை பிணைத்தவராக இருக்கிறார். அதற்கு தமிழ் மேலாண்மைமேல் அவர் கொண்ட பற்று காரணமாக இருக்கலாம். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், கனடியத் தமிழர் பேரவையுடனும் அவர் தன்னை அடையாளப்படுத்துவதும் இதன்பாற்பட்டதே. இந்தச் ‘சாணக்கியத்தை’ நாம் புரிந்து கொள்வது அவரை அவமரியாதை செய்வதற்காகவல்ல. ஈழவிடுலைக்கு அவரது நேர்மறைப் பங்களிப்பு மறுக்க முடியாதது.
விலகி இருப்பதைவிட ஆட்டத்தில் இருப்பதில் ஆர்வம் கொண்டவர் முரளி.
சுவிஸ் நாட்டிலும், மேலும் ஸ்ரீலங்காவின் பூஸா முகாமில் அடைக்கப்பட்டிருந்த காலத்தைக்கூட ஈழவிடுதலைக்கு அவரது பங்களிப்பாக நாம் பார்க்க வேண்டும். சுமார் 31 மாதம் ஸ்ரீலங்கா அரசால் வதைக்கப்பட்டவர் அவர் என்கிறார்கள். வதைபட்ட இடங்களில் பலாலி, ஆனையறவு, குருநகர், காங்கேசன்துறை இராணு முகாம்கள் அடக்கம். பூஸா முகாமில் மட்டும் 20 மாதங்களுக்கு மேல் சித்திரவதை அனுபவித்தவராம். கடைசியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் சிறைத்தண்டனை பெற்று வெலிக்கடையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பிரபாகரன், கிட்டு போன்ற போராளித் தலைவர்களோடு அவர் நெருங்கி இருந்திருப்பதை கண்டதற்கும் சாட்சிகள் உண்டு. விலகி இருப்பதைவிட ஆட்டத்தில் இருப்பதில் ஆர்வம் கொண்டவர் முரளி.
முரளியின் “ஆட்டம்” குறித்து கருத்துரைத்த ஒரு அரசியல் அவதானி நண்பர் “உந்த முரளியை யாரும் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது” என்று எச்சரித்தார். அது எச்சரிக்கையா பாராட்டா என்று நான் கேட்கவில்லை. சுமந்திரன் சாணக்கியன்போலவே தன்னை நோக்கி எறியப்படும் அத்தனை பந்துகளையும் லாவகமாக தனக்கான சிக்ஸர்களாக மாற்றுவதில் கில்லாடி அவர். “அன்று சுவிஸில் அடாவடியாக தான் ஆடிய ஆட்டத்தையே கனடாவில் நிதானத்துடன் ஆடுகிறார்” என்ற இன்னொரு நண்பரின் கூற்றில் உண்மையில்லாமலில்லை. உண்மையில் கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், கனடியத் தமிழர் பேரவையும் அவர் தேடி நிற்கும் இலக்கு அல்ல.
சுமந்திரன் கூட்டம் குழம்பியதற்கு முரளியின் ஆட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது ஒன்றுதான் காரணம் அல்ல. தமிழ் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு தலைவரை அவமானப்படுத்தவேண்டும் என்ற முனைப்போடு பின்னாலிருந்து இயங்கிய பலரது நச்சுத்தனமான செயல்களும் அதற்குக் காரணமாகும். ‘அவர்களது’ பெயர்களை ஊகித்து எழுத முடியும். ஆனால் அது தேவையற்றது. இன்னும் சொல்லப்போனால், கனடாவிற்கு அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை – அவரது கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்லவிடாமல் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டு பிறகு அப்படிச் செய்தவர்களே தமது செய்கைக்கு “கருத்துச் சுதந்திரம்” என்று முலாம் பூசுவது சாத்தான் வேதம் ஒதுவது போன்றதாகும்.
கருத்துச் சுதந்திரம் என்பது விரும்பியதையெல்லாம் செய்வதல்ல.
“கருத்துச் சுதந்திரம்” என ஏமாற்ற முனைபவர்கள் ஒன்றை மட்டும் கவனிக்க வேண்டும். ஜனநாயக மீறல்களை காட்டுமிராண்டித் தனமாக செய்வதில் தொடர்ந்தும் நீவிர முனைப்புடன் ஈடுபடுவீர்களென்றால், அது பெரும் ஆபத்தில் நம் சமூகத்தைக் கொண்டு வந்து விட்டுவிடும். நாளை மேற்குலக நாடுகள் உங்களையும், மற்றவர்களையும் கணக்கில் வைத்து; சாம, பேத, தான, தண்ட வழிகளில் அடக்கிவிட்டு, ஈழத்தமிழர்மேல் ஒரு தீர்வுப் பொதியை – அதே மேற்குலக நாடுகள் – திணிப்பதற்குத்தான் இது கொண்டு வந்து விடும். (புரிந்தவன் பிஸ்தா.) ஒரு காலத்தில் அற்புதமானதொரு வலைப்பின்னலாயிருந்த (Network) உலகத்தமிழர் இயக்கம் சிதைக்கப்பட்ட வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அதுவன்றோ.
கருத்துச் சுதந்திரம் என்பது விரும்பியதையெல்லாம் செய்வதல்ல.
ஒரு பேச்சுக்கு நாளை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேடைக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். (மாவீரர் நாளில் அவரை சேர்க்காத வரைக்கும் தலைவர் உயிரோடிருப்பது சாத்தியம் அல்லவா) அப்படி அவர் வரும்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு ஒட்டுக் குழு அங்கு வந்து ஆர்ப்பரிக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.. அதன்பின் ‘கருத்துச் சுதந்திரத்திற்கு’ என்ன நடந்திருக்கும். அது வரலாற்றில் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
கருத்துச் சுதந்திரமாம்…. கருத்துச் சுதந்திரம்.. “இதுதான் எங்கள் உலகம்!”
- கனடா மூர்த்தி