முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவியை கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு உறுதியளித்துள்ளது.
குடியிருப்பு பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள், அவர்களது குடும்பங்கள், நாடளாவிய ரீதியில் உள்ள சமூகங்களுக்கான முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு ஆதரவாக இந்த நிதி உதவி அறிவிக்கப்பட்டது.
உள்ளூர் மட்டத்தில் நல்லிணக்க திட்டங்களுக்கு ஆதரவான முயற்சிகளுக்கு ஐந்து வருடங்களுக்குள் இந்த நிதி உதவி வழங்கப்படும் என கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த முயற்சியில் கனடா முழுவதும் உள்ள திருச்சபைகள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் முதற்குடிகள், Metis மற்றும் Inuit மக்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களுக்கான நிதி தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது.
அர்த்தமுள்ள திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், குடியிருப்பு பாடசாலை அமைப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியை எதிர்கொள்பவர்களுக்கு உதவவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என நம்புவதாக கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழுவின் தலைவர் Raymond Poisson கூறினார்.
நூற்றாண்டுக்கும் மேலாக கனடிய அரசுக்காக நடத்தப்பட்ட குடியிருப்புப் பாடசாலைகளில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு கடந்த வெள்ளிக்கிழமை மன்னிப்பு கோரியது இங்கு குறிப்பிடத்தக்கது.