இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கனேடிய தேர்தல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல்கள் பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்களின் தொடர்ச்சியான எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுகின்றன.
இந்த ஆண்டு தேர்தலில் அதிக சதவீத பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஐந்து முக்கிய கட்சிகளும் 2019 தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்களின் சதவீதத்தை இம்முறை அதிகரித்துள்ளது.
கட்சிகள் தங்கள் இறுதி வேட்பாளர் நியமனப் பட்டியலை தேர்தல் திணைக்களத்திடம் August 30 ஆம் திகதிக்குள் (தேர்தல் நாளுக்கு 21 நாட்களுக்கு முன்னர்) சமர்ப்பிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் பாலின வேறுபாடு கொண்ட வேட்பாளர்கள் ஐந்து முக்கிய கட்சிகளில் உள்ள அனைத்து வேட்பாளர்களில் 44 சதவீதமாகும். இது 2019 தேர்தலில் போட்டியிட்ட 42 சதவீதத்தில் இருந்து சற்று அதிகரிப்பாகும். ஆனாலும் 2019 தேர்தலின் போது, 42 சதவீத வேட்பாளர்கள் பெண்கள் அல்லது பாலின வேறுபாடு கொண்டவர்களாக இருத்த போதிலும் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
NDP தனது பட்டியலில் 52 சதவீதம் அல்லது 175 வேட்பாளர்களுடன் அதிக சதவீத பெண்கள் அல்லது பாலின வேறுபட்ட வேட்பாளர்களைக் கொண்டுள்ளது. 2019ல் இருந்த 49 சதவிகிதத்தில் இருந்து இது ஒரு சிறிய அதிகரிப்பாகும்.
Bloc Quebecois கட்சி, மட்டுமே பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்களில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. 78 வேட்பாளர்களில் 47 சதவிகிதம் (அல்லது 37 பேர்) மட்டுமே பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணிக்கை 2019 இல் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
பசுமை கட்சியின் வேட்பாளர்களில் 44 சதவீதமானவர்கள் பெண்கள் அல்லது பாலின வேறுபாடு கொண்டவர்கள்.
Liberal கட்சியின் சார்பில் இந்த ஆண்டு போட்டியிடுபவர்களில் 147 பேர், அல்லது 43 சதவிகிதமானவர்கள் பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்களாவர். இது 2019ஆம் ஆண்டின் 39 சதவீதத்திலிருந்து அதிகரிப்பாகும்.
Conservative கட்சி இந்த ஆண்டு பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை 111 ஆக அதிகரித்துள்ளது. இது கட்சியின் மொத்த வேட்பாளர்களில் 33 சதவீதமாகும். 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 32 சதவீதத்தை விட இது சிறிய அதிகரிப்பாகும்.
இம்முறை 2015 தேர்தலுக்குப் பின்னர் ஆண் அல்லாத வேட்பாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் குறிக்கிறது என வேட்பாளர்களின் பாலின வேறுபாட்டைக் கண்காணிக்கும் Equal Voice என்ற அமைப்பு கூறுகிறது.
இலங்கதாஸ் பத்மநாதன்