Liberal கட்சித் தலைவர் Justin Trudeau, தனது அரசாங்கத்தை COVID தொற்றின் மத்தியில் கலைக்க ஆளுநர் நாயகம் Mary Simonனிடம் கோரியபோது, வரலாற்று ரீதியில் கனடாவின் அதிக செலவு செய்யப்படுவதாக மதிப்பிடப்படும் தேர்தல் ஆரம்பமானது.
தொற்று காரணமாக எதிர்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அதிக தகுதிவாய்ந்த வாக்காளர்கள்,பணவீக்கம் ஆகியன இம்முறை தேர்தல் செலவு உயர்வை ஏற்படுத்துகின்றது. 36 நாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக 610 மில்லியன் டொலர்கள் விலைக் குறியீட்டை தேர்தல் திணைக்களம் மதிப்பிடுகிறது. 2019இல், தேர்தல் செலவு 502.4 மில்லியன் டொலர்களாக இருந்தது.
ஏன் இரண்டு வருடங்கள் கழித்து, தேர்தல் ஒன்றிற்கு சுமார் 100 மில்லியன் டொலர்கள் அதிகமாக செலவாகிறது. இதில் பல காரணிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டி உள்ளது. முதலில், ஒரு தொற்றின் மத்தியில் தேர்தலை முன்னெடுப்பதற்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. அதற்கு கூடுதல் செலவு தேவைப்படுகின்றது. கனேடிய தேர்தல் திணைக்களம் புதிய நடைமுறைகளை அமைக்க வேண்டும். அதிகம் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்து சில உபகரணங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
இவை அனைத்தும் அதிகரித்த செலவுக்கு காரணியாகின்றது. November 2020இல் கனேடிய தேர்தல் திணைக்களத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை , முகமூடிகள் உள்ளிட்ட தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்புப் பொருட்கள், அஞ்சல் மூல வாக்கு அமைப்பில் சரிசெய்தல் மற்றும் வாக்காளர் தகவல் பிரச்சாரத்திற்கான கூடுதல் செலவுகள் சுமார் 52 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடுகின்றது.
கூடுதல் தகுதியுள்ள வாக்காளர்கள் உட்பட, தேர்தல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பிற காரணிகளும் இதில் உள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு மில்லியன் அதிக வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருக்கலாம் என ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது.
தேர்தல் செலவீன அதிகரிப்புக்கு மற்றொரு காரணி பணவீக்கம். இந்த தேர்தல் பிரச்சாரம் தனித்துவமானது. ஏனெனில் இது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காலத்தில் நடத்தப்படுகிறது. தேர்தல் திணைக்களம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (wifi), Canada Post (வாக்காளர் அட்டைகள், சிறப்பு வாக்குச்சீட்டுக்களை அஞ்சல் செய்வதற்கு) போன்ற சேவை வழங்குநர்களையும் நம்பியுள்ளது. அந்த சேவைகளின் செலவுகள் ஒரு தேர்தலில் இருந்து அடுத்த தேர்தலுக்கு மாறலாம்.
எப்படி பார்த்தாலும் இதுதான் கனேடிய வரலாற்றில் அதிகம் செலவு செய்யப்படும் தேர்தலாகும்.
இந்த கட்டத்தில், ஒட்டுமொத்த செலவையும் கணிக்க முடியாதது எனக்கூறும் தேர்தல் திணைக்களம், தொற்றின் பரவல் நிலையைப் பொறுத்தது அது மாறுபடும் எனக் கூறுகிறது.